தேனி
தென் மாவட்டங்களில் முக்கிய வழக்குகளின்விசாரணையை துரிதப்படுத்த சிறப்பு அதிகாரிகள் நியமனம்:தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் பேட்டி
|தென் மாவட்டங்களில் கொலை, கொள்ளை, போக்சோ உள்ளிட்ட முக்கிய வழக்குகளின் விசாரணையை துரிதப்படுத்த சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ரா கார்க் தெரிவித்தார்.
ஐ.ஜி. பேட்டி
தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ரா கார்க் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு நேற்று வந்தார். அங்கு மாவட்டத்தில் முக்கிய குற்ற வழக்குகள் குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினார். கூட்டத்தை தொடர்ந்து ஐ.ஜி. அஸ்ரா கார்க் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தேனி மாவட்டத்தில் குற்றங்களை தடுக்க போலீஸ் சூப்பிரண்டு சிறப்பான நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன் விளைவாக இந்த ஆண்டு கோர்ட்டு விசாரணையில் இருந்த 4 கொலை வழக்குகள், 3 போக்சோ வழக்குகள், 9 வழிப்பறி வழக்குகள் என மொத்தம் 19 வழக்குகளில் தொடர்புடைய நபர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட்டது. இதில் 4 கொலை வழக்குகளிலும் சம்பந்தப்பட்ட 4 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட்டது.
கொலை வழக்குகள்
மாவட்டத்தில் இந்த ஆண்டு 16 கொலை நடந்துள்ளது. அதில் 13 கொலை குடும்ப பிரச்சினையால் நடந்துள்ளது. இந்த கொலை வழக்குகளில் ரவுடி, பழிக்குப்பழி வாங்குதல், சாதி, மத ரீதியான கொலை வழக்குகள் எதுவும் இல்லை. கொலை வழக்கில் தொடர்புடைய நபர்களுக்கு அதிகப்பட்ச தண்டனை பெற்றுக் கொடுக்கும் வகையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் சிறப்புக் கவனம் செலுத்தப்படுகிறது. அதில் கூடுதல் அம்சமாக இனி வரும் காலங்களில் கொலை வழக்குகளின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் முன்பு வழக்கு விவரங்களை துணை போலீஸ் சூப்பிரண்டு 3 முறையும், மாவட்ட சூப்பிரண்டு 2 முறையும் தீவிர ஆய்வு செய்வார்கள். அதன்பிறகு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதால் அதிகப்பட்ச தண்டனை பெற்றுக் கொடுக்க முடியும்.
சிறப்பு அதிகாரி
அத்துடன் கொலை, கொள்ளை, கஞ்சா விற்பனை, போக்சோ போன்ற வழக்குகளின் கோர்ட்டு நடைமுறைகளை தொடர்ச்சியாக கண்காணிக்க சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். தென்மாவட்டங்களில் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேனி மாவட்டத்தில் இத்தகைய குற்றங்கள் தொடர்பான 270 வழக்குகள் முக்கிய வழக்குகளாக எடுக்கப்பட்டு சிறப்பு அதிகாரியிடம் வழக்கு விவரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இது வழக்கின் விசாரணை வேகத்தை இன்னும் வேகப்படுத்தும்.
மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் முதல் தற்போது வரை 10 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருந்த வழக்குகள் உள்பட நிலுவையில் இருந்த 12 ஆயிரத்து 500 வழக்குகளின் இறுதி அறிக்கையை சம்பந்தப்பட்ட கோர்ட்டுகளில் தாக்கல் செய்து ஒப்புதல் பெறப்பட்டு சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது, திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. அபினவ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே ஆகியோர் உடனிருந்தனர்.