கள்ளக்குறிச்சி
தண்ணீரின்றி காய்ந்து கருகி வரும் மக்காச்சோள பயிர்கள்
|மூங்கில்துறைப்பட்டு பகுதியில் தண்ணீரின்றி மக்காச்சோள பயிர்கள் காய்ந்து கருகி வருகிறது. இதனால் அங்கு மேய்ச்சலுக்காக விவசாயிகள் கால்நடைகளை விடும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
மூங்கில்துறைப்பட்டு,
மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பழையூர், இளையாங்கன்னி கூட்டுரோடு, சீர்பாதநல்லூர், சவேரியார்பாளையம், ஆர்க்கவாடி, அரும்பரம்பட்டு, சுத்தமலை உள்பட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் கிணற்று பாசனம் மூலம் அதிக நிலப்பரப்பில் மக்காச்சோளம் சாகுபடி செய்து பராமரித்து வந்தனர். மேலும் மானாவரி நிலங்களிலும் சாகுபடியை மேற்கொண்டனர்.
பயிர்கள் நன்கு வளர்ந்து பூ பூத்தது. இதனால் இந்தாண்டு அமோக விளைச்சல் இருக்கும். அதன் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் கோடை மழை போதுமான அளவுக்கு பெய்யாத காரணத்தால், நிலத்தடி நீர் மட்டம் கிடுகிடுவென குறைந்து பெரும்பாலான கிணறுகள் தற்போது தண்ணீர் இன்றி வறண்டு விட்டது. இதன் காரணமாக மக்காச்சோள பயிர்களுக்கு போதுமான அளவுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் தண்ணீரின்றி மக்காச்சோள பயிர்கள் தற்போது காய்ந்து கருகி வருகிறது. குறிப்பாக பூக்கள் எல்லாம் கருகி விட்டதால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளதால், அவர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
நிவாரணம் வழங்க வேண்டும்
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், அதிக செலவு செய்து மக்காச்சோள பயிரை சாகுபடி செய்து பராமரித்து வந்தோம். ஆனால் நாங்கள் எதிர்பார்த்தது போல் கோடை மழை போதுமான அளவுக்கு பெய்யவில்லை. இதனால் கிணறுகள் தண்ணீரின்றி வறண்டு விட்டதால் எங்களது பயிர்கள் தற்போது காய்ந்து கருகி வருகிறது.
இதேபோல் மானாவரி நிலங்களில் சாகுபடி செய்த பயிர்களும் காய்ந்து கருகி வருகிறது. அரும்பாடு பட்டு நாங்கள் வளர்த்து வந்த பயிர்கள் தற்போது எங்கள் கண் முன்னே காய்ந்து கருகி வருவதை பார்க்கும் போது ரத்த கண்ணீர்தான் வருகிறது.
இதனால் வேறு வழியின்றி எங்களது வயல்களில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடும்பரிதாப நிலை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது.. பயிர்கள் கருகி விட்டதால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க கருகிபோன பயிர்களை வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.