பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார் மைத்ரேயன்
|பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் மீண்டும் மைத்ரேயன் இணைந்துள்ளார்.
சென்னை,
பிரபல மருத்துவரான வா.மைத்ரேயன் கடந்த 1991-ல் பாஜகவில் இணைந்து, மாநில செயற்குழு உறுப்பினர், மாநில அறிஞர் அணி தலைவர், பொதுச் செயலாளர், மாநில துணை தலைவர் என பல்வேறு பதவிகளை வகித்தார். பின்னர், 1999 -ம் ஆண்டு பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த அவர், 2002-ம் ஆண்டு அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
இபிஎஸ் - ஓபிஎஸ் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், முதலில் ஓபிஎஸ் அணியிலும், பிறகு இபிஎஸ் அணியிலும் இருந்து வந்தார். ஓபிஎஸ்ஸை சந்தித்ததால், கடந்த 2022-ல் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து, கடந்த ஆண்டு ஜூன்9-ம் தேதி மீண்டும் பாஜகவில் இணைந்தார்.
இதையடுத்து, அவருக்கு பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில், இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மைத்ரேயன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மைத்ரேயன் அதிமுகவில் மீண்டும் இணைத்துக்கொண்டார்.