சிவகங்கை
ரூ.70 லட்சம் மதிப்பில் பராமரிப்பு பணிகள்
|சிவகங்கை நகரில் சீரான குடிநீர் வினியோகம் செய்ய ரூ.70 லட்சம் மதிப்பில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது என்று நகர்மன்ற கூட்டத்தில் நகரசபை தலைவர் துரை ஆனந்த் தெரிவித்தார்.
சிவகங்கை,
சிவகங்கை நகரில் சீரான குடிநீர் வினியோகம் செய்ய ரூ.70 லட்சம் மதிப்பில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது என்று நகர்மன்ற கூட்டத்தில் நகரசபை தலைவர் துரை ஆனந்த் தெரிவித்தார்.
நகராட்சி கூட்டம்
சிவகங்கை நகராட்சி கூட்டம் நகரசபை தலைவர் துரை ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் துணை தலைவர் கண்ணன், பொறியாளர் பாண்டீஸ்வரி மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:-
மன்ற உறுப்பினர் அன்புமணி:-
எனது வார்டுக்குட்பட்ட அம்பேத்கர் தெருவில் உள்ள பால்வாடியில் குடிநீர் கிடையாது. மேலும் நகரில் குடிநீர் சப்ளை செய்வதில் சில வாரங்களுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாளும் சில பகுதிகளில்5 நாட்களுக்கு ஒரு முறையும் தான் குடிநீர் வருகிறது. எனவே இதை சரி செய்ய வேண்டும்.
நகர்மன்ற உறுப்பினர் என்.எம்.ராஜா:-
சிவகங்கை மேல ரத வீதியில் கழிவுநீர் வாய்க்கால் சுத்தப் படுத்துவதற்காக வீடுகளின் முன்பு போடப்பட்டிருந்த படிக்கட்டுகளை அகற்றியுள்ளனர். அவை அப்படியே தெருவில் கிடைக்கின்றது.இதனால் பொதுமக்கள் பெரும் அவதி அடைகின்றனர்.
நினைவு தூண்
நகர்மன்ற உறுப்பினர் பிரியங்கா:-
சிவகங்கை நகரில் பாரம்பரியமாக சங்கு ஒலிக்கும் முறை இருந்து வந்தது. தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. எனவே மீண்டும் சங்கு ஒலிக்கும் முறையை கொண்டுவர வேண்டும்.மேலும் நகரில் தியாகிகளை போற்றும் வகையில் நினைவுத்தூண் அமைக்க வேண்டும்.
நகர்மன்ற உறுப்பினர் புஷ்பா:-
வீட்டு வரி உயர்வால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே வீட்டு வரியுடன் சேர்த்து வசூலிக்கப்படும் குப்பை வரியை ரத்து செய்ய வேண்டும்.
ரூ.70 லட்சத்தில்...
இதற்கு பதில் அளித்து நகரசபை தலைவர் கூறியதாவது:-
அம்பேத்கர் தெருவில் செயல்படும் பால்வாடியில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தற்போது சிவகங்கை நகரில் சீரான முறையில் குடிநீர் வழங்க ரூ.70 லட்சத்திற்கு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. பொதுவாகவே சிவகங்கை நகராட்சியில் வருவாய் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. தொழில் வரி கட்டுவதில்லை. நகராட்சி வருவாயை பெருக்கினால் தான் நாம் செயல்படும் முடியும். எனவே குப்பை வரியை ரத்து செய்ய முடியாது. மேலும் வீட்டு வரி உயர்வு என்பது அரசின் கொள்கை முடிவு நாம் அதில் தலையிட முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.