< Back
மாநில செய்திகள்
விபத்துகளைத் தடுக்க தண்டவாளங்களை பராமரிப்பது அவசியம்- தெற்கு ரெயில்வே
மாநில செய்திகள்

விபத்துகளைத் தடுக்க தண்டவாளங்களை பராமரிப்பது அவசியம்- தெற்கு ரெயில்வே

தினத்தந்தி
|
18 Feb 2024 8:46 PM IST

ரெயில் தடம் புரல்வதை தடுக்க தண்டவாள பராமரிப்பு உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என்று தெற்கு ரெயில்வே கூறியது.

சென்னை,

தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ரெயில் இயக்கங்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து, தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்டம் சீரான இடைவெளியில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், 18-ந்தேதி , சென்னை கடற்கரை - தாம்பரம் பிரிவில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள 4 மணி நேரம் 15 நிமிடங்கள் ரெயில் இயக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட நேரத்தில், ரெயில் இணைப்புகளை சரிபார்த்தல், வெல்டிங் பணிகள், கனரக எந்திரங்கள் மூலம் தேவையற்ற கழிவுகளை அகற்றுதல் மற்றும் பிற பாதைகளை மேம்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த முக்கியமான வழித்தடப் பணிகள் பகல் நேரத்தில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டியதால் 44 ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டது. வரும் கோடை காலத்தை கருத்தில் கொண்டு இந்த பாதை பராமரிப்பு பணிகள் தவிர்க்க முடியாதவை ஆகும். இருப்பினும், பயணிகளின் சிரமத்தை தவிர்த்திடும் வகையில், தெற்கு ரெயில்வேயின் கோரிக்கைக்கு ஏற்ப கூடுதல் பஸ்கள் மற்றும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டன. விபத்துகளைத் தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக தண்டவாளங்களை பராமரிப்பது முக்கியம். தண்டவாளங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். ரெயில் தடம் புரல்வதை தடுக்க ரெயில்வே இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்