சென்னை வங்கி கொள்ளையில் முக்கிய குற்றவாளி கைது
|சென்னை வங்கி கொள்ளையில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
சென்னை,
சென்னை அரும்பாக்கம் ரசாக் கார்டன் சாலையில் பெடரல் வங்கியின் நகைக்கடன் பிரிவான பெட் வங்கி நிதிச்சேவைகள் மையம் இயங்கி வருகிறது. இந்த வங்கியில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்திருந்த 31.7 கிலோ நகைகள் கடந்த 13-ந் தேதி கொள்ளை போனது.
பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் சென்னை மாநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வங்கியின் கிளை மேலாளர் சுரேஷ் அளித்த புகாரின் பேரில் அரும்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
3 பேர் கைது
இந்த கொள்ளை சம்பவத்தை அதே வங்கியில் மண்டல மேலாளராக பணிபுரிந்த முருகன் என்பவர் மூளையாக இருந்து, 10 நாட்களாக திட்டம் தீட்டி, கூட்டாளிகளுடன் சேர்ந்து அரங்கேற்றியது தெரியவந்தது.
கொள்ளை நடந்த 24 மணி நேரத்துக்குள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை வில்லிவாக்கம் பாரதி நகரை சேர்ந்த சந்தோஷ் (வயது 30), அதே பகுதி மண்ணடி தெருவை சேர்ந்த பாலாஜி (28) ஆகியோர் முதலில் சிக்கினர். அவர்களிடம் இருந்து 18 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.8.5 கோடி ஆகும்.
முக்கிய குற்றவாளி முருகன் கைது
இதற்கிடையே முக்கிய குற்றவாளியான முருகன் நேற்று கொரட்டூரில் உள்ள வீட்டில் பதுங்கியிருந்தபோது போலீசிடம் சிக்கினார். அவரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஏற்கனவே, மீட்கப்பட்ட 18 கிலோ தங்க நகைகள் போக மீதமுள்ள 13.7 கிலோ நகைகள் முருகனிடம் இருக்கும் என தெரிகிறது. இந்த கொள்ளை சம்பவத்தில் முருகன்தான் மூளையாக செயல்பட்டுள்ளார்.
எனவே, அவரிடம் நடத்தப்படும் விசாரணையில்தான் பல முக்கிய தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது. வங்கியில் பணியாற்றும் வேறு ஊழியர்கள் யாருக்காவது மறைமுக தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 கார்கள் பறிமுதல்
மேலும் இந்த கொள்ளை சம்பவத்துக்கு உதவியாக இருந்த செந்தில்குமரன் என்பவரையும் போலீசார் பிடித்தனர். இவர்களிடம் இருந்து2 கார்கள், ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்தநிலையில் குற்றவாளிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நகைகள் நேற்று காலை அரும்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டது. அங்குள்ள அறையில் 18 கிலோ தங்க நகைகளும் காட்சிப்படுத்தப்பட்டன.
சங்கர் ஜிவால் பார்வையிட்டார்
இந்த நகைகளை பெருநகர சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பார்வையிட்டு வங்கி அதிகாரிகளை அழைத்து, நகைக்கான ஆவணங்களை வாங்கி சரிபார்த்தார்.
அவருடன் கூடுதல் கமிஷனர் அன்பு, இணை கமிஷனர் ராஜேஸ்வரி, துணை கமிஷனர் விஜயகுமார் ஆகியோர் வந்தனர்.
பின்னர் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நிருபர்களிடம் கூறியதாவது:-
போலீசார் விசாரணை
கடந்த 13-ந் தேதி மதியம் 2.30 மணிக்கு பெட் வங்கியின் நிதிச்சேவைகள் மையத்தில் 31.7 கிலோ தங்க நகைகள் கொள்ளை போனது. கொள்ளை நடந்த 20 நிமிடத்தில், வாடிக்கையாளர் ஒருவர் மூலம் போலீசுக்கு தகவல் வந்தது. உடனடியாக அங்கு சென்ற போலீசார் விசாரணையை தொடங்கினர்.
வங்கியில் 2 ஊழியர்களும், ஒரு காவலாளியும் இருந்துள்ளனர். அதே வங்கியில் பணிபுரிந்த முருகன் என்பவர் கூட்டாளிகள் 3 பேருடன் உள்ளே வந்து, ஊழியர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவர்களிடம் இருந்து நகைகள் வைக்கப்பட்டிருக்கும் லாக்கர் அறையின் சாவியை பறித்துக்கொண்டு, ஊழியர்களை ஒரு அறையில் போட்டு அடைத்து வைத்துள்ளார்.
கேமரா மீது 'ஸ்பிரே' அடித்தனர்
பின்னர், லாக்கரை திறந்து 31.7 கிலோ தங்க நகைகளை 2 பெரிய பைகளில் அள்ளிக்கொண்டு அங்கிருந்து வெளியேறியுள்ளனர். கண்காணிப்பு கேமராவில் எதுவும் பதிவாகக்கூடாது என்பதற்காக, அதன் மீது 'ஸ்பிரே' அடித்துள்ளனர். இருந்தாலும், கொள்ளையர்கள் உள்ளே வந்த காட்சிகள் அதில் பதிவாகியுள்ளன.
நகைகளை திருடிய கொள்ளையர்கள் வெளியே சென்று, 2 மோட்டார் சைக்கிள்களில் தனித்தனியாக சென்றுள்ளனர். கொள்ளையர்களை பிடிப்பதற்காக 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு
அதில் ஒரு படையினர் கடந்த 10 நாட்களாக முக்கிய குற்றவாளி முருகன் யார் யாரை சந்தித்தார்?, யார் யாருடன் செல்போனில் பேசினார்? என்பது குறித்த தகவல்களை திரட்டி விசாரணை மேற்கொண்டனர். மற்றொரு படையினர், கொள்ளையர்கள் தப்பி சென்ற வழியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இப்படி ஒவ்வொரு படையினரும் ஒரு பணியை செய்தனர். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. கொள்ளை நடந்த 24 மணி நேரத்தில், சந்தோஷ், பாலாஜி, செந்தில் குமரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 18 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளன.
ஒரே பள்ளியில் படித்தவர்கள்
கடந்த 10 நாட்களாகவே இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்ற இவர்கள் திட்டமிட்டு உள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட முருகன், சந்தோஷ், பாலாஜி, சூரியா ஆகியோர் ஒரே பள்ளியில் படித்தவர்கள். முக்கிய குற்றவாளியான முருகனை தவிர மேலும், 3-4 பேருக்கு இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருக்கிறது. அவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.
முருகன் சிக்கிய பிறகுதான், இந்த கொள்ளை வழக்கில் மேலும் பல தகவல்கள் வெளியாகும். மீட்கப்பட்ட நகைகளை வைத்து பார்க்கும்போது, கொள்ளையடித்த நகைகளை பாதியாக பங்கு போட்டுள்ளனர். மீதி நகை முருகனிடம் இருக்கும் என தெரிகிறது.
அலாரம் ஒலிக்கவில்லை
கூட்டாளிகளுடன் முருகன் வங்கிக்கு கொள்ளையடிக்க வரும்போது, வாசலில் நின்ற காவலாளிக்கு மயக்க குளிர்பானம் கொடுத்துள்ளார். ஆனால், அவர் மயக்கம் அடையவில்லை. வங்கியில் அடகு நகைகள் வைக்கப்பட்டிருக்கும் லாக்கருக்கு 2 சாவிகள் இருக்கும். அதில் ஒன்று இங்கேயும், மற்றொன்று வங்கியிலும் இருக்கும்.
லாக்கரை இவ்வாறு திறக்கும்போது, வங்கியில் உள்ள அலாரம் ஒலித்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு ஒலி எழுப்பவில்லை. எனவே, அதுகுறித்தும் விசாரணை நடந்து வருகிறது. மேலும், இதுபோன்ற வங்கிகளில் நகைகள் வைக்கப்பட்டிருக்கும் அறை முறையாக இருக்கிறதா?, பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக செய்யப்பட்டு உள்ளதா? என்பதை ரிசர்வ் வங்கிதான் மாதந்தோறும் ஆய்வு செய்ய வேண்டும். இதுகுறித்து நாங்கள் வலியுறுத்துவோம்.
கொள்ளையர்களை பிடிக்கும் போலீசாருக்கு ரூ.1 லட்சம் பரிசை போலீஸ் டி.ஜி.பி. அறிவித்துள்ளார். அதை அவர் விரைவில் வழங்குவார் என்று நம்புகிறேன். நான் அந்த தொகையை ரூ.5 லட்சமாக உயர்த்தி கேட்க இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
நகைக்கடையாக மாறிய போலீஸ் நிலையம்
3 கொள்ளையர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ.8.5 கோடியாகும். பொதுவாக, வங்கியில் அடகு வைக்கப்படும் நகைகள், தனியாக சிறிய பிளாஸ்டிக் கவர்களில் போட்டு லாக்கரில் பாதுகாக்கப்படும்.
லாக்கரை திறந்து நகைகளை அள்ளிச்சென்ற கொள்ளையர்கள், அதை ஒவ்வொரு இடமாக மாற்றிக்கொண்டே இருந்தார்களே தவிர, நகைகளை எதுவும் செய்யவில்லை. போலீசார் பிடியில் அவர்கள் சிக்கியபோதும், வங்கியில் இருந்து நகைகளை அள்ளிச்சென்ற அதே பையுடன்தான் இருந்துள்ளனர். இந்த நகைகள் அனைத்தும் அரும்பாக்கம் போலீஸ் நிலையத்தில் 3 பெரிய மேஜைகளில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அந்த நகைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த விதத்தை பார்க்கும்போது, ஏதோ நகைக்கடைக்குள் இருந்த உணர்வு ஏற்பட்டது.
போலீசிடம் சிக்காமல் இருக்க மொட்டை தலைக்கு மாறிய பாலாஜி
அரும்பாக்கம் பெட் வங்கியில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட மறுநாள், வங்கிக்கு முன்பு இருந்த கண்காணிப்பு கேமராவில், கொள்ளை நடந்தபோது பதிவான காட்சிகள் தொலைக்காட்சிகளில் வெளியாகின. 2 மோட்டார் சைக்கிள்களில் முருகன், சந்தோஷ், பாலாஜி, சூரியா ஆகியோர் தப்பி சென்றது ஒளிபரப்பப்பட்டது.
இதை குற்றவாளிகளில் ஒருவரான பாலாஜியும் பார்த்துள்ளார். உடனே, சுதாரித்துக்கொண்ட அவர், போலீஸ் கண்ணில் மண்ணை தூவ, தனது தலை முடியை ஒட்ட வெட்டியுள்ளார். அதாவது, மொட்டை தலையாகவே மாறியுள்ளார். அதன்பிறகு, பயமில்லாமல் வெளியே சுற்றியுள்ளார். இருந்தாலும் போலீஸ் வேட்டையில் மொட்டை தலையுடன் சிக்கிவிட்டார்.