< Back
மாநில செய்திகள்
மகாவிஷ்ணு விவகாரம்: சென்னை முதன்மை கல்வி அலுவலர் பணியிட மாற்றம்
மாநில செய்திகள்

மகாவிஷ்ணு விவகாரம்: சென்னை முதன்மை கல்வி அலுவலர் பணியிட மாற்றம்

தினத்தந்தி
|
17 Sept 2024 7:14 PM IST

மகா விஷ்ணு விவகாரத்தில் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னை,

பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மகா விஷ்ணு கடந்த வாரம் சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் மத்தியில் ஆன்மிக சொற்பொழிவு ஆற்றினார். அவருடைய பேச்சு சமூகவலைதளங்களில் வெளியாகிய நிலையில், மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சையாக பேசியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள், புகார்கள் வந்த நிலையில் சைதாப்பேட்டை போலீசார் அவரை கைது செய்தனர்.

அதனைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பனை விசாரணை செய்ய உத்தரவிட்டார். பின்னர் மகாவிஷ்ணு விவகாரம் தொடர்பான அறிக்கை தயார் செய்து பள்ளிக்கல்வித்துறை செயலாளரிடம் இயக்குனர் கண்ணப்பன் வழங்கிய நிலையில், இது தொடர்பாக முதல்-அமைச்சரின் தனிச் செயலாளர் சண்முகம், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மதுமதி மற்றும் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் உடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து இனிவரும் காலங்களில் பள்ளிகளில் இது போன்று நடக்காமல் இருப்பதற்காக புதிய வழி முறைகள் வகுக்கப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் சென்னை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மார்ஸ், தஞ்சாவூர் சரபோஜி நூலகத்திற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்