< Back
மாநில செய்திகள்
மகாளய அமாவாசை:பவானி கூடுதுறையில் பக்தர்கள் குவிந்தனர்காவிரியில் புனித நீராடி, முன்னோருக்கு திதி கொடுத்தனர்
ஈரோடு
மாநில செய்திகள்

மகாளய அமாவாசை:பவானி கூடுதுறையில் பக்தர்கள் குவிந்தனர்காவிரியில் புனித நீராடி, முன்னோருக்கு திதி கொடுத்தனர்

தினத்தந்தி
|
15 Oct 2023 12:47 AM GMT

மகாளய அமாவாசையையொட்டி பவானி கூடுதுறையில் குவிந்த பக்தர்கள் காவிரியில் புனித நீராடி முன்னோருக்கு திதி கொடுத்தனர்.

பவானி,

மகாளய அமாவாசையையொட்டி பவானி கூடுதுறையில் குவிந்த பக்தர்கள் காவிரியில் புனித நீராடி முன்னோருக்கு திதி கொடுத்தனர்.

திதி-தர்ப்பணம்

பொதுவாக இறந்த முன்னோர்களை நினைத்து அமாவாசை தினத்தில் திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பது குடும்பத்துக்கு நன்மை தருவதாக இருக்கும். ஆனால் அனைத்து மாதங்களிலும் இப்படி செய்வது என்பது அனைவருக்கும் முடியாது.

எனவே ஆடி அமாவாசை, தை அமாவாசை மற்றும் புரட்டாசி மகாளய அமாவாசைகளில் திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பது ஆண்டு முழுவதற்கும் திதி கொடுப்பதற்கு சமமானதாக உள்ளது. இதில் புரட்டாசி அமாவாசையான மகாளய அமாவாசை தினத்தன்று, குடும்பத்தில் மறைந்து போன அத்தனை நபர்களின் ஆன்மாக்களும் நம்மை தேடி வருவதாக ஐதீகம். எனவே இந்த நாளில் அவர்களை நினைத்து திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பது அவர்களின் ஆன்மாவை மகிழ்விக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

பவானி கூடுதுறை

இந்த திதி மற்றும் தர்ப்பண வழிபாடுகளை நீர் நிலைகளையொட்டி செய்து, அங்கு புனித நீராடுவது இன்னும் சிறப்பாகும். அந்தவகையில் ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள பவானி கூடுதுறை முன்னோருக்கு திதி கொடுக்க மிகச்சிறந்த தலமாக உள்ளது.

இங்கு காவிரி ஆறு, பவானி ஆறு ஆகியவற்றுடன் கண்ணுக்கு புலப்படாத அமுதநதியும் சங்கமிக்கிறது. எனவே திரிவேணி சங்கமமாக இது திகழ்கிறது. இங்கு காவிரியில் புனித நீராடி, காவிரிக்கரையில் முன்னோருக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து சங்கமேஸ்வரர்- வேதநாயகி அம்மனையும், ஆதி நாராயண பெருமாளையும் வணங்குபவர்களுக்கு முன்னோரின் ஆன்மாவின் ஆசி கிடைக்கும்.

அதுமட்டுமின்றி, காசி, கயா உள்ளிட்ட புண்ணியதலங்களுக்கு நிகரான பவானி கூடுதுறையில் முன்னோருக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பது மிகவும் சிறந்ததாகும்.

மகாளய அமாவாசை

அமாவாசை தினங்களில் இங்கு ஏராளமானவர்கள் வருவது வழக்கம். நேற்று மகாளய அமாவாசை என்பதால் சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாகம், பவானி நகராட்சி நிர்வாகம் மற்றும் போலீசார் மூலம் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

நேற்று அதிகாலையில் 4 மணிக்கு முன்னதாகவே பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கூடுதுறைக்கு வரத்தொடங்கினார்கள். அமாவாசை தர்ப்பணம் கொடுக்க காலை 6 மணிக்கு மேல் நல்ல நேரம் என்பதால் அந்த நேரத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் கூடுதுறைக்கு வந்தது.

காவிரியில் புனித நீராடினர்

புரோகிதர்களால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பக்தர்கள் குவிந்து, தங்கள் முன்னோருக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்க வந்தனர். எள்-தண்ணீர் விட்டு திதி கொடுத்தும், அரிசி மாவில் பிண்டம் செய்து தர்ப்பணம் கொடுத்தும் பலரும் தங்கள் முன்னோரை நினைத்து வழிபாடு செய்தனர்.

பக்தர்கள் முன்னதாக காவிரியில் புனித நீராடி ஈரத்துணியுடன் புரோகிதர்களிடம் வந்தனர். அவர்கள் உரிய பூஜை செய்து திதி மற்றும் தர்ப்பண பொருட்களை மீண்டும் வழங்கினார்கள். அதையும் தலையில் வைத்தபடியே காவிரியில் இறங்கி தண்ணீரில் விட்டு புனித நீராடினார்கள்.

படித்துறைகளில் பக்தர்கள்

ஆண் பக்தர்கள் தனியாகவும், பெண் பக்தர்கள் தனியாகவும் காவிரியில் நீராட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. காவிரியில் தண்ணீர் மிகக்குறைந்த அளவில் வந்ததால் படித்துறைகள் பக்தர்களால் நிரம்பி வழிந்தது.

கூடுதுறையின் எந்தப்பக்கம் பார்த்தாலும் வேத மந்திரங்கள் முழங்க, பக்தர்களுக்காக புரோகிதர்கள் திதி மற்றும் தர்ப்பண வழிபாடுகளை நடத்தினர். பரிகார மண்டபம், காயத்திரி மண்டபம் மற்றும் காவிரிக்கரை முழுவதும் பரிகார பூஜை, திதி மற்றும் தர்ப்பண வழிபாடுகள் நடந்தன.

பவானி ஸ்தம்பித்தது

பல்லாயிரக்கணக்கானவர்கள் குவிந்ததால் பவானி நகரமே ஸ்தம்பித்தது. பஸ்நிலையம், பவானி- குமாரபாளையம் பழைய பாலம், காலிங்கராயன் பாளையம், லட்சுமி நகர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருந்தது.

பக்தர்களின் பாதுகாப்புக்காக 122 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, போலீசார் கண்காணித்து வந்தனர். தீயணைப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜி.ஜவகர் உத்தரவின் பேரில் பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு அமிர்தவர்ஷினி தலைமையில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கூடுதுறையில் போதிய இடம் இல்லாமல் தனியார் மண்டபங்களிலும் திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்க புரோகிதர்கள் இடம் ஏற்பாடு செய்து இருந்தனர்.

கூடுதுறை காவிரிக்கரை வரை வர முடியாத வெளியூர் பக்தர்கள் பலர் காலிங்கராயன் வாய்க்காலில் நீராடி, அங்கேயே பூஜை செய்து சென்றனர்.

மேலும் செய்திகள்