அரியலூர்
மகாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
|தா.பழூர் அருகே மகாகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே அருள்மொழி கிராமத்தில் பிரசித்தி பெற்ற மகாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன்படி கடந்த ஆண்டு திருப்பணிகளை தொடங்கி, அண்மையில் நிறைவு செய்தனர். இதனைதொடர்ந்து கும்பாபிஷேக விழா கடந்த 26-ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து வாஸ்து சாந்தி, பிரவேசப்பலி, முளைப்பாரி ஊர்வலம், யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. நேற்று காலை 2-ம் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றது. பின்னர் மேளதாளத்துடன் கடம் புறப்பாடு நடந்தது. கோவில் விமான கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை முழங்க புனித நீரை ஊற்றினர். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. விழாவில் அருள்மொழி, காரைக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை அருள்மொழி மகாகாளியம்மன் திருப்பணி கமிட்டி குழுவினர் மற்றும் கிராம நாட்டாண்மைகள் செய்திருந்தனர்.