திருநெல்வேலி
சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி விழா
|நெல்லையில் சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
நெல்லையில் சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
நெல்லையப்பர் கோவில்
நெல்லை டவுன் நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவிலில் நேற்று இரவு மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. இரவு 10 மணி அளவில் முதல் கால சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து அதிகாலை வரை நான்கு கால சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையொட்டி சிவபெருமான், நெல்லையப்பருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றன. ருத்ராட்சைகளால் ஆன சிவலிங்கம், நவதானியங்களால் உருவான சிவலிங்கத்தை பக்தர்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர்.
இதேபோல் பாளையங்கோட்டை திரிபுராந்தீஸ்வரர் கோவில், நெல்லை சந்திப்பு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கைலாசநாதர் கோவில், குறிச்சி சொக்கநாதர் கோவில் உள்ளிட்ட அனைத்து சிவன் கோவில்களிலும் நேற்று இரவு விடிய விடிய சிவராத்திரி பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, வழிபட்டனர். அவர்கள் இரவு முழுவதும் கண்விழித்து ஓம் நமச்சிவாய என்று பாடிக் கொண்டும், எழுதிக் கொண்டும் இருந்தனர்.
சிறப்பு நிகழ்ச்சி
இதுதவிர இந்த ஆண்டு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதல்படி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி நெல்லையப்பர் கோவில் சார்பில் பாளையங்கோட்டை தசரா மைதானத்தில் நேற்று மாலை 6 மணி முதல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 6 மணி வரை சிறப்பு ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாலை 6 மணிக்கு சுரேஷ் மற்றும் சரவணன் குழுவினரின் மங்கள இசை நிகழ்ச்சியுடன் நிகழ்ச்சி தொடங்கியது. இதை தொடர்ந்து திருமுறை விண்ணப்பம், கைலாய வாத்தியம் இசைத்தல், பரதநாட்டியம், வில்லிசை, இசை முழக்கம் உள்ளிட்ட பல்வேறு பக்தி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
எட்டெழுத்து பெருமாள்
நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலையில் உள்ள சக்திநாத ஸ்படிக பரமேஸ்வரர் லிங்கத்திற்கு சிவராத்திரியையொட்டி நேற்று மாலை 6 மணிக்கு பிரதோஷ சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து கோபாலகிருஷ்ணர், விநாயகர், முருகன், ராமர், சீதாதேவி, லட்சுமணர், ஆஞ்சநேயருக்கும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், சிறப்பு பூஜையும் நடைபெற்றது. இரவு 8 மணிக்கு சிவராத்திரி முதல் கால பூஜை, கும்ப பூஜை, சிறப்பு ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது.
சிறப்பு பூஜையில் சக்திநாத ஸ்படிக பரமேஸ்வரர் லிங்கத்திற்கு பால், இளநீர், விபூதி, சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இதேபோல் விடிய விடிய சிறப்பு பூஜைகளும், அபிஷேக அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது.
இரவு 7.45 மணிக்கு திருமால் திருச்சிற்றம்பலம் திரை இசை நிகழ்ச்சியும், சிறப்பு பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை ஸ்படிகலிங்கத்திற்கு தாமரை மலர் கொண்டு சிறப்பு புஷ்பாஞ்சலி நடக்கிறது.
ராமலிங்க சுவாமி
இதேபோல் அருகன்குளம் ராமலிங்க சுவாமி கோவிலில் சிவராத்திரியையொட்டி விடிய விடிய சிறப்பு பூஜைகளும் அலங்கார தீபாராதனையும் நடந்தது. பர்வதவர்த்தினி அம்பாள், பிண்டம் போட்ட ராமருக்கும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
ஜடாயு தீர்த்தம் லட்சுமி நாராயணர் கோவிலில் உள்ள சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், சிறப்பு பூஜையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பாளையங்கோட்டை இ.பி. காலனி வரசித்தி விநாயகர் மகாலிங்கேஸ்வரர் உடனுறை கோமதியம்பாள் கோவிலில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. இதையொட்டி இரவு 8.30 மணி முதல் அதிகாலை 3.30 மணி வரை நான்கு கால சிறப்பு பூஜைகள் நடந்தது.