பெரம்பலூர்
மகா மாரியம்மன் கோவில் தேரோட்டம்
|மகா மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே பாளையம் கிராமத்தில் உள்ள மகா மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 8-ந்தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் இரவில் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்தார். கடந்த 22-ந்தேதி முளைப்பாரி, பால்குட ஊர்வலமும், நேற்று முன்தினம் தீ மிதித்தல், அலகுக் குத்துதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகளுக்குப் பிறகு அலங்கரிக்கப்பட்ட அம்மன் தேரில் எழுந்தருளினார். பின்னர், பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த தேர் மாலையில் நிலையை அடைந்தது. இந்த தேரோட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மஞ்சள் நீராட்டு விழாவுடன் இன்று (புதன்கிழமை) திருவிழா நிறைவடைகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, ஸ்ரீமகா மாரியம்மன் கோவில் நிர்வாகிகள், திருவிழாக் குழுவினர் மற்றும் இளைஞர் மன்றத்தினர் செய்திருந்தனர்.