சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உள்ள ராஜகோபுரத்திற்கு இன்று மகா கும்பாபிஷேகம்
|சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உள்ள ராஜகோபுரத்திற்கு இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
திருச்சி,
அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோவில் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது ஆகம விதி ஆகும்.அதன்படி இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன.
கோவிலின் முன்பகுதியான கிழக்குப் பக்கத்தில் ராஜகோபுரம் கட்டுவதற்காக கோவில் நிதி ரூபாய் 21/2 கோடியில் சுமார் 30 அடி உயரத்தில் கல்காரம் கட்டும் பணி நடந்து முடிந்தது. மேலும் கோவிலின் வடக்கு, தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் கோபுரங்கள் கட்டி முடிக்கப்பட்டன.
இந்நிலையில்,ராஜகோபுரம் கட்டும் பணி மேலும் காலதாமதம் ஆகும் என்பதால் முதல் கட்டமாக வடக்கு, தெற்கு,மேற்கு பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட கோபுரங்களுக்கு கடந்த 2017 -ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.இதையடுத்து, விரைவில் ராஜகோபுரத்தின் கட்டுமான பணிகளை முடித்து கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்து இருந்தனர்.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள நன்செய் இடையாரை சேர்ந்த பொன்னர் -சங்கர் என்ற இரட்டை சகோதரர்கள் ராஜகோபுரம் கட்டி தர முன்வந்தனர். இதையடுத்து திட்ட மதிப்பீடு செய்து 73 அடி உயரத்தில் 7 நிலைகளைக் கொண்ட ராஜகோபுரம் கட்டும் பணி தொடங்கி முடிவுற்றது.
அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் ராஜ கோபுரத்தின் உச்சியில் கலசங்கள் பொருத்தும் பணி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து யாகசாலை பூஜை நேற்று முன்தினம் தொடங்கியது. அன்று மாலையில் முதல் கால யாகபூஜை நடைபெற்றது. நேற்று காலை இரண்டாம் கால யாகபூஜையும், மாலையில் மூன்றாம் கால யாக பூஜையும் நடைபெற்றது.
அதனைதொடர்ந்து இன்று அதிகாலை 4.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம் நான்காம் கால பூஜை நடைபெற்றது. அதை தொடர்ந்து காலை 6 மணிக்கு மகாபூர்ணா ஹூதியும்,தீபாராதனை, யாத்திரா தானம் நடைபெறுகிறது. தொடர்ந்து 6.45 மணிக்கு மேல் 7.25 மணிக்குள் 7 நிலைகள் கொண்ட கிழக்கு ராஜகோபுரத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடை பெறுகிறது.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோவில் மின்னொளியில் ஜொலிக்கிறது. கும்பாபிஷேகத்தை காண்பதற்காக இரவு முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் சமயபுரம் வந்து குவிய தொடங்கினர்.கும்பாபிஷேகத்திற்கு,திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் திருச்சி போலீஸ் ஐஜி சந்தோஷ் குமார் உத்தரவின்படி சுமார் 1500-க்கும் மேற்பட்ட போலீசார், போக்குவரத்து போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.