மதுரையில் 1,400 அடி உயரத்தில் ஏற்றப்பட்ட மகா தீபம்... திரளான பக்தர்கள் சாமி தரிசனம்...!
|பிரசித்தி பெற்ற அழகர்கோவில் மலை உச்சியில் வெள்ளிமலை கோம்பை தளத்தில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.
மதுரை,
மதுரையில் பிரசித்தி பெற்ற அழகர்கோவில் மலை உச்சியில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் பவுர்ணமி நாளில் மகாதீபம் ஏற்றப்படுவது வழக்கம். அதன்படி நேற்று மாலை 6 மணிக்கு 1,400 அடி உயரத்தில் உள்ள வெள்ளிமலை கோம்பை தளத்தில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.
அழகர்மலை உச்சியில் உள்ள வெள்ளிமலை தீப கொப்பரையில் 300 கிலோ நெய் பயன்படுத்தி தீபம் ஏற்றப்பட்டது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல கள்ளழகர் கோவில் ராஜகோபுரம் பதினெட்டாம் படி கருப்பணசுவாமி கோவில் முன்பு குடில் அமைத்து சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வும் நடைபெற்றது.
மேலும் முருகப்பெருமானின் ஆறாவது படைவீடான சோலைமலை முருகன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலையில் ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அலங்காரமும், அபிஷேகமும், மகா தீபாராதனையும் சுவாமி புறப்பாடும் நடைபெற்றது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு பரணி தீபமும், கார்த்திகை மகா தீபமும் ஏற்றப்பட்டது. தொடர்ந்து ராஜ கோபுரம் முன்பாக பனை ஓலைகளை வைத்து சொக்கப்பனை ஏற்றப்பட்டது.