திருச்சி
மாசி சதுர்த்தசியையொட்டி நடராஜருக்கு மகா அபிஷேகம்
|மாசி சதுர்த்தசியையொட்டி நடராஜருக்கு மகா அபிஷேகம் நடந்தது.
மாசி சதுர்த்தசி
சிவபெருமானின் 64 திருவடிவங்களில் ஒருவர் நடராஜமூர்த்தி. சிவன் அபிஷேகப் பிரியர். ஆனால் நடராஜமூர்த்திக்கோ ஆண்டுக்கு ஆறுமுறை மட்டுமே அபிஷேகம். எனவே இந்த ஆறு அபிஷேகங்களும் சிவாலயங்களில் மிகவும் சிறப்பாக நடைபெறும்.
சித்திரை மாதம் திருவோணம் நட்சத்திரம், ஆனி மாதம் உத்திரம் நட்சத்திரம், மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம் ஆகிய நாட்களிலும், ஆவணி, புரட்டாசி, மாசி ஆகிய மாதங்களில் வளர்பிறை சதுர்த்தசி திதிகளிலும் மகா அபிஷேகம் நடைபெறுகிறது. அதன்படி இந்த ஆண்டு மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி திதி நேற்று மாலை தொடங்கியது.
மகா அபிஷேகம்
இதையொட்டி திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன்கோவில்களிலும் உள்ள நடராஜர்- சிவகாமி அம்மனுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. திருச்சி உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோவிலில் நடராஜர்-சிவகாமி அம்மனுக்கு நேற்று மாலை மகா அபிஷேகம் நடைபெற்றது. விபூதி, திரவியம், பச்சரிசி மாவு, மஞ்சள், தேன், பஞ்சாமிர்தம், பால், தயிர், கரும்புச்சாறு, எலுமிச்சை சாறு, மாதுளை சாறு, அன்னம், இளநீர், சந்தனம், களபம், பன்னீர் என்று 16 வகை பொருட்களை கொண்டு சுவாமி-அம்மனுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் சிறப்பு அலங்காரத்தில் நடராஜர்-சிவகாமி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசமனம் செய்தனர். இதுபோல் உய்யகொண்டான் திருமலையில் உஜ்ஜீவநாத சுவாமி கோவில், மலைகோட்டை தாயுமானசாமிகோவில், திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் அகிலாண்டேசுவரி அம்மன் கோவில் நடராஜர்-சிவகாமசுந்தரி அம்மனுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.