கோயம்புத்தூர்
மக்னா யானை, மீண்டும் ஊருக்குள் புகுந்தது
|சின்னக்கல்லார் வனப்பகுதியில் விடப்பட்ட மக்னா யானை, மீண்டும் ஊருக்குள் புகுந்தது. இதனால் தொழிலாளர்கள் பீதி அடைந்தனர்.
வால்பாறை
சின்னக்கல்லார் வனப்பகுதியில் விடப்பட்ட மக்னா யானை, மீண்டும் ஊருக்குள் புகுந்தது. இதனால் தொழிலாளர்கள் பீதி அடைந்தனர்.
மக்னா யானை
பொள்ளாச்சி அருகே சரளபதி பகுதியில் அட்டகாசம் செய்து வந்த மக்னா யானை, கடந்த 31-ந் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு, சின்னக்கல்லார் வனப்பகுதியில் விடப்பட்டது. ஆனால் அந்த யானை அடர்ந்த வனப்பகுதிக்குள் செல்லாமல் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியை ஒட்டிய வனப்பகுதியிலேயே முகாமிட்டு வந்தது.
ஏற்கனவே அந்த யானை, தர்மபுரியில் அட்டகாசம் செய்ததால் பிடித்து வரப்பட்டு, மானாம்பள்ளி வனப்பகுதியில் விடப்பட்டது. ஆனால் அங்கிருந்து சரளபதி ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்ததால், சின்னக்கல்லார் வனப்பகுதியில் விடப்பட்டது. ஆனாலும் அடர்ந்த வனப்பகுதிக்குள் செல்லாததால், எப்போது வேண்டுமானாலும் ஊருக்குள் நுழையலாம் என்று கூறப்பட்டது.
ஊருக்குள் புகுந்தது
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் சிங்கோனா 2-வது பிரிவு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் அந்த மக்னா யானை புகுந்தது. தொடர்ந்து அங்குள்ள மரங்களில் இருந்து பலாக்காய்களை பறித்து தின்று அட்டகாசம் செய்தது. இதை கண்ட தொழிலாளர்கள் பீதி அடைந்தனர். மேலும் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் அந்த யானையை விரட்ட முயன்றனர். ஆனால் வனத்துறையினரை எதிர்த்து யானை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பிறகு அந்த யானை வனப்பகுதியை நோக்கி சென்றது.