கோயம்புத்தூர்
மக்னா யானை, டாப்சிலிப் வனப்பகுதிக்கு வந்தது
|மானாம்பள்ளியில் விடப்பட்ட மக்னா யானை, டாப்சிலிப் வனப்பகுதிக்கு வந்தது. அது ஊருக்குள் புகுவதை தடுக்க கும்கி உதவியுடன் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
பொள்ளாச்சி
மானாம்பள்ளியில் விடப்பட்ட மக்னா யானை, டாப்சிலிப் வனப்பகுதிக்கு வந்தது. அது ஊருக்குள் புகுவதை தடுக்க கும்கி உதவியுடன் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மக்னா யானை
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மக்னா யானை ஒன்று அட்டகாசம் செய்தது. அந்த யானையை கடந்த பிப்ரவரி மாதம் 5-ந் தேதி பிடித்து வரகளியாறு வனப்பகுதியில் விட்டனர். பின்னர் கடந்த 22-ந்தேதி வனத்தை விட்டு வெளியேறிய அந்த யானை, பொள்ளாச்சிக்கு வந்தது. தொடர்ந்து கோவை அருகே பேரூர் தேவிசிறை அணைக்கட்டு பகுதிக்கு சென்ற யானையை மீண்டும் பிடித்து, மானாம்பள்ளி வனப்பகுதியில் விட்டனர். அங்கு சுற்றித்திரிந்த அந்த யானை, டாப்சிலிப் வனப்பகுதிக்கு வந்தது.
கண்காணிப்பு குழு அமைப்பு
இந்த நிலையில் நேற்று முன்தினம் அம்புலி தங்கும் விடுதி பகுதியில் அந்த யானை முகாமிட்டு இருந்தது. பின்னர் பண்டாரவிளை பகுதிக்கு சென்றது. அந்த யானை பொள்ளாச்சி வனப்பகுதி வழியாக சேத்துமடை ஊருக்குள் வருவதை தடுக்க ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியம் உத்தரவின் பேரில் துணை இயக்குனர் பார்கவ் தேஜா மேற்பார்வையில் வனச்சரகர் புகழேந்தி தலைமையில் 8 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
வனவர், வேட்டை தடுப்பு காவலர்கள், பாகன்கள் உள்பட ஒரு குழுவிற்கு 7 பேர் வீதம் 56 பேர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் கும்கி யானை ஜெயவர்தன் வன எல்லையில் நிறுத்தப்பட்டு உள்ளது.
சின்ன தம்பியை அழைக்க முடிவு
இதற்கிடையில் உலாந்தி வனச்சரகர் சுந்தரவேல் தலைமையிலான குழுவினர் டாப்சிலிப் வனப்பகுதியில் யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, அந்த யானையை கண்காணிக்க வாகனம் மூலம் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் சத்தியமங்கலத்திற்கு சென்ற கும்கி யானை சின்ன தம்பியை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றனர்.