கோயம்புத்தூர்
விடுதி நுழைவு வாயிலை உடைத்த மக்னா யானை
|வால்பாறை அருகே விடுதி நுழைவு வாயிலை உடைத்து மக்னா யானை அட்டகாசம் செய்தது.
வால்பாறை
வால்பாறை அருகே கொய்யா மரங்கள், விடுதி நுழைவு வாயிலை உடைத்து மக்னா யானை அட்டகாசம் செய்தது. இதனால் தோட்ட தொழிலாளர்கள் பீதி அடைந்து உள்ளனர்.
மக்னா யானை
தர்மபுரியில் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த மக்னா யானையை வனத்துறையினர் பிடித்து, பொள்ளாச்சி அருகே உள்ள மானாம்பள்ளி வனப்பகுதியில் விட்டனர். ஆனால் அந்த யானை அடர்ந்த வனப்பகுதிக்குள் செல்லாமல் சரளபதி ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்தது. இதனால் அந்த யானையை மீண்டும் பிடித்து, சின்னக்கல்லாறு வனப்பகுதியில் விட்டனர். அங்கிருந்து அக்காமலை புல்மேடு, அக்காமலை எஸ்டேட், ஊசிமலை டாப், பெரியகல்லாறு, உபாசி, சிங்கோனா, சிறுகுன்றா, நடுமலை, பச்சைமலை, நல்லகாத்து மற்றும் கூழாங்கல் ஆறு வழியாக நேற்று முன்தினம் நள்ளிரவில் குரங்குமுடி எஸ்டேட் வழியாக சென்று சிவா காபி எஸ்டேட்டை ஒட்டிய வனப்பகுதியில் முகாமிட்டு வருகிறது.
அட்டகாசம்
இந்த மக்னா யானை நேற்று அதிகாலை சிவா காபி எஸ்டேட் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. தொடர்ந்து கொய்யா மரங்களை உடைத்து, பழங்களை ருசித்தது. பின்னர் அருகில் உள்ள தனியார் தங்கும் விடுதியின் நுழைவு வாயிலை உடைத்து அட்டகாசம் செய்தது.
இதை அந்த வழியாக வந்த தோட்ட தொழிலாளர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே மக்னா யானை, அருகில் உள்ள வனப்பகுதியில் சென்று பதுங்கி கொண்டது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த வனத்துறையினர், மக்னா யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். வனப்பகுதியில் நடமாடி வந்த மக்னா யானை, தற்போது தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் வர தொடங்கி உள்ளதால், அவர்கள் பீதியில் உள்ளனர்.