செங்கல்பட்டு
மதுராந்தகம் ஜி.எஸ்.டி. சாலை பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல்
|மதுராந்தகம் ஜி.எஸ்.டி. சாலை பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பஜார் வீதியான ஜி.எஸ்.டி. சாலையின் பெயரை மாற்றம் செய்து மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. உகம்சந்த் பெயரை வைக்க தமிழக அரசு பரிந்துரை செய்தது.
இது குறித்து மதுராந்தகம் நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்ற கூடாது. பெயர் மாற்றம் செய்யக்கூடாது என்று கூறி அந்த பகுதியை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பஸ்நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மாற்ற வேண்டாம்
இது குறித்து அவர்கள் கூறியதாவது:-
சாலையை பெயர் மாற்றம் செய்யும் பட்சத்தில், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, நிலத்தின் பட்டா, வீட்டு மனை உள்ளிட்ட பல்வேறு அரசு ஆவணங்களில் பெயர்களை மாற்றம் செய்ய வேண்டி இருக்கும். இதனால் சாலையின், பெயரை மாற்றம் செய்ய வேண்டாம்.
தமிழக அரசு செவிசாய்க்கவில்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கையாக கடையடைப்பு போராட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.