மதுரை ரெயில் தீ விபத்து: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு முதல் அமைச்சர் நிவாரணம் அறிவிப்பு
|ரெயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மதுரை,
மதுரை அருகே சுற்றுலா ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உத்தரபிரதேசத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர். மேலும், சிலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ரெயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு, நிவாரண உதவியும் அறிவித்துள்ளார். உயிரிழந்தவர்களுக்கு முதல் அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.3 லட்சம் நிவாரண உதவி அளிக்கப்படும் என முதல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், அமைச்சர் மூர்த்தியை சம்பவ இடத்திற்கு சென்று தேவையான உதவிகளை செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளேன் என்றும், காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் முதல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.