மதுரை ரெயில் தீ விபத்து - 5 பேர் கைது
|மதுரையில் சுற்றுலா ரெயில் பெட்டி தீ விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்தது தொடர்பாக ஆன்மிக சுற்றுலா பயணத்தை ஏற்பாடு செய்த சுற்றுலா நிறுவன ஊழியர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை,
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவிலிருந்து ஐ.ஆர்.சி.டி.சி மூலம் ஆன்லைனில் முன்பதிவு செய்த ரெயில் பெட்டிகளில் பயணித்த சுற்றுலாப் பயணிகள், மதுரை ரெயில் நிலையம் அருகே சட்டவிரோதமாக சமையல் கேஸ் சிலிண்டரைப் பயன்படுத்தியதால் ஏற்பட்ட விபத்தில் 9 பேர் பலியானார்கள்.
விபத்தில் 8 பேர் படுகாயமடைந்து மதுரை ரெயில்வே மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் சுற்றுலா பயணிகளை சுற்றுலா அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்த தனியார் நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. லக்னோ சீதாப்பூரை சேர்ந்த பேசின் என்ற டிராவல்ஸ் நிறுவனத்தின் மூலம் தான் இவர்கள் உ.பியிலிருந்து தமிழகத்திற்கு சுற்றுலா வந்துள்ளனர். எனவே அந்த நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்ததுடன் அதன் உரிமையாளரை கைது செய்யுமாறு தெற்கு ரெயில்வே லக்னோ போலீசாருக்கு உத்தரவிட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில், டிராவல்ஸ் நிறுவன ஒருங்கிணைப்பாளர், சமையல் பணியாளர், உதவியாளர் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் விரைவில் தமிழகம் அழைத்து வரப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும் என ரெயில்வே போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.