மதுரை ரெயில் தீ விபத்து; உயிர் தப்பிய 28 பயணிகள் விமானம் மூலம் அனுப்பி வைப்பு
|விபத்தில் உயிர் தப்பிய 28 பயணிகள் விமானம் மூலம் மதுரையில் இருந்து டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மதுரை,
மதுரை ரெயில் நிலையத்தின் போடி ரெயில் பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா ரெயில் பெட்டி நேற்று தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் 9 பயணிகள் உயிரிழந்தனர். மேலும் இதில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரெயிலில் சுற்றுலா பயணிகள் கியாஸ் சிலிண்டரை பயன்படுத்தி சமையல் செய்தபோது, அது வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ரெயில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.
இந்த விபத்தில் உயிர் தப்பிய பயணிகளுக்கு மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் விபத்தில் உயிர் தப்பிய 28 பயணிகள் இன்று மதுரை விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். டெல்லியில் இருந்து உத்தர பிரதேசத்தில் உள்ள அவர்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.