மதுரை ரெயில் பெட்டி தீ விபத்து: பொதுமக்களிடம் ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் இன்று விசாரணை
|தீ விபத்தில் ரெயில் பெட்டி முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது.
மதுரை,
மதுரை ரெயில் நிலையத்தின் போடி ரெயில் பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா ரெயில் பெட்டி நேற்று தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் 9 பயணிகள் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்து குறித்து ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ரெயில் பெட்டி தீ விபத்து குறித்து பெங்களூருவில் உள்ள தென் மண்டலங்களுக்கான ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஏ.எம்.சவுத்ரி இன்று (ஞாயிற்றுக்கிழமை) பொதுமக்களிடம் விசாரணை நடத்த உள்ளார். இந்த விசாரணையானது மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் அலுவலகத்தின் முதல் மாடியில் உள்ள கூட்ட அரங்கில் நடக்கிறது.
விசாரணை காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. விபத்து குறித்து தகவல் தெரிந்த நபர்கள் தங்களுக்கு தெரிந்த விவரங்களை மற்றும் தகவல்களை விசாரணை அதிகாரியிடம் தெரிவிக்கலாம். நேரில் கலந்து கொண்டு தகவல் தெரிவிக்க விரும்பாதவர்கள், ஏ-4 வெள்ளை தாளில் கையால் அல்லது டைப் செய்து ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் அலுவலகம், ரெயில் பவன், 2-வது மாடி, பெங்களூரு - 560023 என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கலாம் என்று தென்னக ரெயில்வே தலைமை மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.