< Back
மாநில செய்திகள்
மதுரையில் பட்டப்பகலில் பயங்கரம்: வீடு புகுந்து தொழிலாளி படுகொலை- மனைவி கண்முன் 2 பேர் வெறிச்செயல்
மதுரை
மாநில செய்திகள்

மதுரையில் பட்டப்பகலில் பயங்கரம்: வீடு புகுந்து தொழிலாளி படுகொலை- மனைவி கண்முன் 2 பேர் வெறிச்செயல்

தினத்தந்தி
|
25 Oct 2023 2:16 AM IST

பட்டப்பகலில் வீடு புகுந்து தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவருடைய மனைவி கண்முன் இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.


வீடு புகுந்து வெட்டினர்

மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு, மோதிலால் தெரு, யோகானந்தசுவாமி மடம் பகுதியை சேர்ந்தவர் பொங்குடி (வயது 65). இவர் ஒரு ஆலையில் தொழிலாளியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி பாண்டியம்மாள். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். திருமணமாகி மகன் ஊட்டியில் ராணுவத்திலும், மகள் அண்ணாநகர் பகுதியிலும் வசித்து வருகின்றனர். பொங்குடியும், அவருடைய மனைவி மட்டுமே சொந்த வீட்டில் வசித்து வந்தனர்.

நேற்று மதியம் பொங்கொடி தனது வீட்டில் சேரில் அமர்ந்தபடி டி.வி. பார்த்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று வீட்டிற்குள் 2 வாலிபர்கள் புகுந்தனர். அவர்கள் பொங்குடியை அரிவாள், கத்தி ேபான்ற ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர்.

போலீசார் விசாரணை

அவரது அலறல் கேட்டு, வீட்டின் உள்ளே சமைத்து கொண்டிருந்த பாண்டியம்மாள் ஓடி வந்தார். அப்போது கணவரை 2 பேர் அரிவாளால் வெட்டியதை கண்டு அதிர்ச்சி அடைந்து அவரும் அலறினார். உடனே இருவரும் கத்தியை காட்டி அவரை மிரட்டிவிட்டு அங்கிருந்து நடந்து மெயின் ரோட்டிற்கு வந்து தப்பிச்சென்றதாக தெரிகிறது. சம்பவ இடத்திலேயே பொங்குடி பரிதாபமாக இறந்து கிடந்தார். தகவல் அறிந்ததும் கரிமேடு போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பொங்குடியின் உடலை பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையாளிகள் யார், கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

ஆள்மாறாட்டமா?

முன்விரோதம் எதுவும் உள்ளதா அல்லது ஆள்மாறாட்டத்தில் இந்த சம்பவம் நடந்ததா? என்ற கோணத்திலும் விசாரணை நடப்பதாக போலீசார் தெரிவித்தனர். தப்பிச்சென்ற 2 பேரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்து மனைவி கண்முன் கணவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்