கிரானைட் கற்களை ஏலம் விடுவது குறித்து மதுரை சிறப்பு கோர்ட்டு முடிவு செய்ய வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு
|கிரானைட் கற்களை ஏலம் விடுவது குறித்து மதுரை சிறப்பு கோர்ட்டு 4 மாதத்துக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
மதுரை மாவட்டத்தில் கிரானைட் சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்படுவதாக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு பிறப்பித்த இடைக்கால உத்தரவின் அடிப்படையில், இந்த முறைகேடு குறித்து அப்போதைய மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம் நேரடியாக ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், ரூ.16 ஆயிரத்து 338 கோடி மதிப்புள்ள கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதாகவும், அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறியிருந்தார்.
இந்தநிலையில், புறம்போக்கு நிலங்களில் எடுக்கப்பட்ட கிரானைட் கற்களை ஏலம் விடுவது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் 2014-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் விசாரித்தார். மனுதாரர்கள் தரப்பில், கிரானைட் முறைகேடு வழக்கில் எங்கள் அலுவலகங்கள் சீல் வைக்கப்பட்டு, ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதால் கிரானைட்கள் மீதான உரிமையை கோர முடியவில்லை.
தோண்டி எடுக்கப்பட்ட குழிகளை நிரப்புவதற்காக விற்க முடியாத கிரானைட் கற்கள், கழிவுகள், நிராகரிக்கப்பட்ட கிரானைட்கள் ஆகியவை தேவைப்படும். அதனால், ஏலம் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்'' என்று வாதிடப்பட்டது.
அரசு தரப்பில், புறம்போக்கு நிலத்தில் வைக்கப்பட்டிருக்கக்கூடிய கிரானைட் கற்கள் மதிப்பிழந்து வருவதால் அவற்றை ஏலமிட முடிவு செய்யப்பட்டது. அப்படியே வைத்திருந்தால் அரசுக்குதான் இழப்பு ஏற்படும் என்பதால், அவற்றை ஏலத்தில் விட்டு, அதில் கிடைக்கும் தொகையை சம்பந்தப்பட்ட வழக்கின் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கூறியிருப்பதாவது:-
ஏற்கனவே 180 பேருக்கு எதிராக பதிவுசெய்யப்பட்ட வழக்குகள் மதுரை சிறப்பு கோர்ட்டில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும்.
கனிம வள சட்டப்படி பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஏலமிடுவது அல்லது விற்பது தொடர்பாக வழக்கை விசாரிக்கும் அந்த விசாரணை கோர்ட்டு தான் முடிவெடுக்க வேண்டும். ஐகோர்ட்டு இந்த உத்தரவை பிறப்பிக்க முடியாது.
அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள விற்கமுடியாத கிரானைட் கற்கள், கழிவுகள், நிராகரிக்கப்பட்ட கிரானைட் கற்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்துவது தொடர்பாக 4 மாதத்தில் மதுரை சிறப்பு கோர்ட்டு முடிவு செய்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.