< Back
மாநில செய்திகள்
போலீஸ் நிலையத்தில் மதுரை கைதி இறந்த வழக்கு:சி.பி.சி.ஐ.டி. போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

போலீஸ் நிலையத்தில் மதுரை கைதி இறந்த வழக்கு:சி.பி.சி.ஐ.டி. போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல்

தினத்தந்தி
|
26 May 2022 11:48 PM IST

போலீஸ் நிலையத்தில் மதுரை கைதி மர்மமான முறையில் இறந்த வழக்கில் 3 போலீசார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சி.பி.சி.ஐ.டி போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

ராமநாதபுரம்,

மதுரையை சேர்ந்தவர் ராமானுஜன். இவருடைய மகன் வெங்கடேசன் (வயது 26). திருட்டு வழக்கு தொடர்பாக கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி பரமக்குடி எமனேஸ்வரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்ட இவர் போலீசார் தாக்கியதில் இறந்ததாக புகார் கூறப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக அப்போதைய சப்-இன்ஸ்பெக்டர் முனியசாமி (65) உள்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில் ஓய்வு பெற்ற முனியசாமியை முதுகுளத்தூர் அருகே உள்ள ஏனாதி பகுதியில் வைத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் போலீசார் கைது செய்தனர்.

கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் முனியசாமி உடல்நிலை பாதிக்கப்பட்டு மதுரை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த சிலமாதங்களுக்கு முன்னர் இறந்தார்.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் நயினார்கோவில் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த தலைமை ஏட்டு பரமக்குடி ஞானசேகரன், முதுகுளத்தூர் போலீஸ் தனிப்பிரிவு போலீஸ்காரர் மஞ்சூர் கிருஷ்ணவேல் மற்றும் சாயல்குடி போலீஸ் தனிப்பிரிவு போலீஸ்காரர் ஆப்பநாடு கோதண்டராமன் ஆகியோரை கைது செய்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கின் ஆதாரங்களை திரட்டி குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் ரகசிய வாக்குமூலம் பெற்று வந்தனர். இதனை தொடர்ந்து தற்போது ராமநாதபுரம் நீதித்துறை நடுவர் எண்.2 கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதனால் இந்த வழக்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
மேலும் செய்திகள்