மதுரை மீனாட்சியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் பதவி - அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தாயார் தேர்வு
|அறங்காவலர் குழு தலைவர் பதவி குறித்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழக அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டது.
மதுரை,
மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கான அறங்காவலர்கள் குழு நியமிப்பது தொடர்பாக இந்து அறநிலையத்துறை ஆலோசனையில் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் மீனாட்சியம்மன் கோவிலுக்கு 5 புதிய அறங்காவலர் உறுப்பினர்களை நியமித்து அண்மையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதில் மதுரை அண்ணாநகரை சேர்ந்த தொழிலதிபரான பி.கே.எம். செல்லையா, ருக்மணி பழனிவேல் தியாகராஜன், அரசரடி பகுதியைச் சேர்ந்த மீனா அன்புநிதி, கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த மருத்துவரும், எழுத்தாளருமான சீனிவாசன், மதுரை காந்திநகர் பகுதியைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் சுப்புலட்சுமி ஆகிய 5 பேர் இடம்பெற்றனர்.
இந்நிலையில் மதுரை மீனாட்சியம்மன் கோவில் அறங்காவலர் குழுவின் தலைவராக அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தாயார் ருக்மணி பழனிவேல் ராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அறங்காவலர் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு 30 நாட்களை கடந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டது. இதையடுத்து ருக்மணி பழனிவேல் ராஜனை அறங்காவலர் குழு தலைவராக நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.