< Back
மாநில செய்திகள்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக  திருப்பணி விரைவில் தொடக்கம்- கோபுரங்கள் சீரமைக்கப்படுகிறது
மதுரை
மாநில செய்திகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக திருப்பணி விரைவில் தொடக்கம்- கோபுரங்கள் சீரமைக்கப்படுகிறது

தினத்தந்தி
|
16 Oct 2022 1:07 AM IST

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.


மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

கும்பாபிஷேகம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கடந்த 2009-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. ஆகமவிதிப்படி வருகிற 2022-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். ஆனால் அதற்கான எந்த ஏற்பாடுகளும் எடுக்கப்படாமல் இருந்தது. மேலும் கோவில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த தீ விபத்தில் சாமி சன்னதி, வீரவசந்தராயர் மண்டபம் சேதம் அடைந்தது. அந்த மண்டபத்தை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

எனவே மண்டபம் மற்றும் கும்பாபிஷேக பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் என்று பக்தர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.25 கோடி மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் வீரவசந்தராயர் மண்டபம் ரூ.18 கோடியில் புனரமைக்கப்படும் என்றார்.

மேலும் இந்த திருப்பணிகள், புனரமைப்பு பணிகள் விரைவில் மேற்கொள்ளப்பட்டு 2 ஆண்டுகளில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் குடமுழுக்கு நடத்தப்படும் என்று அறிவித்தார்.

உபயதாரர்கள் வரவேற்பு

அதைத்தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் முடுக்கி விடப்பட்டன. மேலும் கோவிலில் முதற்கட்ட திருப்பணிகள் மேற்கொள்ள என்ஜினீயர்கள் அதற்கான வேலைகளை தொடர்ந்து செய்து வந்தனர். அதன்படி தற்போது கோவில் கும்பாபிஷேகத்திற்கான முதல் கட்ட திருப்பணிகள் உபயதாரர்கள் மூலம் மேற்கொள்ள அரசு உத்தரவின்படி நிர்வாகம் முடிவு செய்து உள்ளது.

அதற்காக திருப்பணிகள் செய்வதற்கான உபயதாரர்கள் வரவேற்பது குறித்து கோவிலுக்குள் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது.

அதில் கிழக்கு, வடக்கு, மேற்கு 9 நிலை கோபுரம் சுதைகள் மராமத்து செய்து வர்ணம் பூசும் பணிக்கு தனித்தனியாக ரூ.120 லட்சமும், தெற்கு கோபுரத்திற்கு ரூ.130 லட்சமும், வன்னிமர விநாயகர் சன்னதி விமானம் முன் மண்டபம் வர்ணம் பூச ரூ.1.25 லட்சமும், மேலும் அந்த சன்னதியை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்க ரூ.12 லட்சமும், அம்மன் சன்னதி 7 நிலை கோபுரம் மராமத்து செய்து வர்ணம் பூச ரூ.66 லட்சம் என மொத்தம் 21 திருப்பணிகள் மேற்கொள்ள மொத்தம் ரூ.755.25 லட்சத்திற்கு உபயதாரர்கள் வரவேற்கப்படுகிறார்கள் என கூறப்பட்டுள்ளது.

பக்தர்கள் மகிழ்ச்சி

தற்போது முதல் கோபுரங்களை மராமத்து செய்தால் தான் சுமார் 2 ஆண்டுகளில் அந்த பணிகள் முடிவடையும். எனவே கோபுரத்தை சீரமைக்கும் பணியை தற்போது கோவில் நிர்வாகம் தொடங்கி உள்ளது. அதற்கான உபயதாரர்கள் கிடைத்த உடன் விரைவில் திருப்பணிகள் தொடங்கப்படும். இதன் மூலம் மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத் திற்காக முதற்கட்ட பணிகள் தற்போது தொடங்கி உள்ளது பக்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

மேலும் செய்திகள்