< Back
மாநில செய்திகள்
மதுரையில் தொழிலாளி உயிரிழந்த விவகாரம்: வீட்டின் உரிமையாளர் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு
மாநில செய்திகள்

மதுரையில் தொழிலாளி உயிரிழந்த விவகாரம்: வீட்டின் உரிமையாளர் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு

தினத்தந்தி
|
2 July 2023 10:56 AM IST

மதுரையில் தொழிலாளி உயிரிழந்த விவகாரத்தில் வீட்டின் உரிமையாளர் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை,

மதுரை மாநகராட்சி 20-வது வார்டுக்கு உட்பட்ட விளாங்குடி சொக்கநாதபுரம் 1-வது தெரு பகுதியில் ஒருவர் வீடு கட்டி வருகிறார். இந்த பணியில் மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இந்த நிலையில், மாடிக்கு செல்வதற்கான படிக்கட்டு சில நாட்களுக்கு முன்பு கட்டப்பட்டது. நேற்று அந்த படிக்கட்டுக்கு அடிப்பகுதியில் பணிகள் நடந்து கொண்டிருந்தன.

2 ஆண்கள், 2 பெண்கள் என 4 தொழிலாளர்கள் இந்த வேலையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, திடீரென அந்த மாடிப்படி மொத்தமாக பெயர்ந்து அவர்கள் மீது விழுந்தது. அதில் ஒரு பெண், பெயர்ந்து விழுந்த படியின் அடியில் சிக்கினார்.

இதற்கிடையே அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 4 பேரையும் அப்பகுதி மக்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

மற்ற 3 பேர் படுகாயங்களுடன் உடனடியாக மீட்கப்பட்ட நிலையில், தீயணைப்பு வீரர்கள் வந்து மாடிப்படியை லாவகமாக அகற்றி அந்த பெண்ணை மீட்டனர். ஆனால், அதற்குள் அந்த பெண் பரிதாபமாக இறந்துவிட்டார்.

விசாரணையில் அவர், திண்டுக்கல் மாவட்டம், நத்தம் ரெட்டியப்பட்டியை சேர்ந்த மூக்காயி (வயது 52) என்று தெரியவந்தது.

காயம் அடைந்தது கள்ளந்திரியை சேர்ந்த தொண்டிச்சாமி (53), பொய்கை கரைப்பட்டியை சேர்ந்த கட்டையன் (46), ரெட்டியபட்டியை சேர்ந்த ஜோதி (52) எனவும் தெரியவந்தது. 3 பேரும் உடனடியாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபரீத விபத்து தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், வீட்டின் உரிமையாளர், ஒப்பந்ததாரர், பொறியாளர் உள்பட 3 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்