மதுரை
மதுரை மல்லிகை விலை கிடு,கிடு உயர்வு- கிலோ ரூ.1500-க்கு விற்பனை
|மதுரை மல்லிகை விலை உயர்ந்து கிலோ ரூ.1500-க்கு விற்பனை செய்யப்பட்டது.
மதுரை மாவட்டத்தை பொறுத்தவரையில் எலியார்பத்தி, பாரப்பத்தி, வலையன்குளம், குசவன்குண்டு உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து மல்லிகைப்பூக்கள் மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படுகின்றன. இதுதவிர விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்தும் மதுரைக்கு மல்லிகை பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இங்கே கொண்டுவரப்படும் பூக்கள், விற்பனை செய்வதோடு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் காரணமாக திருவிழா, சுபமுகூர்த்த தினங்களில் மல்லிகை பூ விலை உச்சத்தை தொடும்.
இந்தநிலையில், கடந்த சில தினங்களாக மதுரை மாட்டுத்தாவணிக்கு மல்லிகை பூக்களின் வரத்து அதிகமாக இருந்தது. இதனால் பூக்களின் விலையும் குறைவாக இருந்தது.
இதற்கிடையே விநாயகர் சதுர்த்தி பண்டிகை நெருங்கி வருவதை தொடர்ந்து மதுரை மார்க்கெட்டில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதன்படி நேற்று மதுரை மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப்பூவின் விலை ரூ.1300 முதல் ரூ.1500 வரை விற்பனை செய்யப்பட்டது. இதுபோல் பிச்சி ரூ.700, முல்லை ரூ.700, கனகாம்பரம் ரூ.600, பட்டன் ரோஸ் ரூ.150, சம்பங்கி ரூ.200, செவ்வந்தி ரூ.100 என விற்பனையானது.