மதுரை
மதுரை மல்லிகை விலை ரூ.2 ஆயிரத்தை கடந்தது
|பனிப்பொழிவு காரணமாக மதுரை மல்லிகை வரத்து குறைந்ததால் விலை கிடுகிடுவென உயர்ந்து நேற்று ரூ.2 ஆயிரத்தை கடந்தது.
மதுரை,
பனிப்பொழிவு காரணமாக மதுரை மல்லிகை வரத்து குறைந்ததால் விலை கிடுகிடுவென உயர்ந்து நேற்று ரூ.2 ஆயிரத்தை கடந்தது.
மதுரை மல்லிகை
மதுரை, விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து மல்லிகைப்பூக்கள் மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. வெளிநாடுகளுக்கும் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. எனவே திருவிழா, முகூர்த்த தினங்களில் மதுரை மல்லிகைப்பூ விலை உச்சத்தை தொடும்.
தற்போது பனிப்பொழிவு இருப்பதால் மதுரை பகுதிகளில் இருந்து மதுரை மாட்டுத்தாவணிக்கு மல்லிகை பூக்களின் வரத்து குறைந்துள்ளது. இதனால் பூக்களின் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. அதன்படி நேற்று மதுரை மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப்பூவின் விலை ரூ.2000 முதல் ரூ.2300 வரை விற்பனை செய்யப்பட்டது. இதுபோல், ஒரு கிலோ பிச்சி ரூ.1200-க்கும், முல்லை ரூ.1000-க்கும், கனகாம்பரம் ரூ.1200-க்கும் விற்பனையானது.
மேலும் அதிகரிக்கும்
இதுகுறித்து பூ வியாபாரி வினோத் கூறுகையில், "கடும் பனிப்பொழிவு காரணமாக மல்லிகைப்பூ மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. செடிகளிலேயே மொட்டுகள் கருகும் நிலை உள்ளது. பூக்களின் வரத்து கணிசமாக குறைந்ததால் விலை உயரத் தொடங்கியுள்ளது. மல்லிகைப்பூ கடந்த வாரம் ஒரு கிலோ ஆயிரத்திற்கும் குறைவாக விற்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.2 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி வருகிறது. 2 நாட்கள் முகூர்த்த தினமாக இருப்பதால் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது, என்றார்.