< Back
மாநில செய்திகள்
மதுரை மல்லிகை கிலோ ரூ.250-க்கு விற்பனை
மதுரை
மாநில செய்திகள்

மதுரை மல்லிகை கிலோ ரூ.250-க்கு விற்பனை

தினத்தந்தி
|
24 Jun 2023 12:57 AM IST

மதுரை மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.250-க்கு விற்பனையானது.

மதுரை மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.250-க்கு விற்பனையானது.

மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்

மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டுக்கு மதுரை மட்டுமின்றி அண்டை மாவட்டங்களில் இருந்தும் மல்லிகை பூக்கள் விற்பனைக்காக டன் கணக்கில் கொண்டு வரப்படுகிறது. தற்போது, வெயில் காலம் என்பதால் மல்லிகைப்பூவின் வரத்து அதிகமாக இருக்கிறது.

இதனால் மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் பூக்களின் விலை தொடர்ந்து சரிந்துள்ளது.

அதன்படி, நேற்று காலையில், மதுரை மாட்டுத்தாவணி மார்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப்பூ விலை ரூ.300-க்கு விற்பனையானது. நேரம் செல்லச்செல்ல அதன் விலை குறைந்து ஒரு கிலோ ரூ.250-க்கு விற்பனையானது. மல்லிகை விலை குறைவாக இருந்ததையொட்டி அதனை அதிக அளவில் மக்கள் வாங்கி சென்றனர்.

மற்ற பூக்கள் விலை

பிச்சி ஒரு கிலோ ரூ.300, முல்லை ரூ.200, கனகாம்பரம் ரூ.300, பட்டன்ரோஸ் ரூ.150, சம்பங்கி ரூ.50, செண்டுமல்லி ரூ.200 என விற்பனையானது. மற்ற பூக்களின் விலையும் குறைவாகவே இருந்தது. இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-

வழக்கமாக மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டுக்கு 10 டன் அளவு பூக்கள் வரும். ஆனால், தற்போது அதிக விளைச்சல் காரணமாக தினமும் 20 டன் வரை மல்லிகைப்பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

விற்பனை போக, மீதமுள்ள பூக்கள் வெளிநாடுகளுக்கும், செண்ட் ஆலைகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனாலும் செண்ட் நிறுவனத்தினர் ஒரு கிலோ மல்லிகைப்பூவை ரூ.200 என்ற விலையில்தான் கொள்முதல் செய்கின்றனர். இன்னும் சில நாட்களுக்கு இந்த விலைதான் தொடரும். முகூர்த்த தினங்கள் வந்த பின்னர் பூக்களின் விலை மீண்டும் உயர தொடங்கும்" என்றனர்.

விவசாயிகள் வேதனை

திருமங்கலம் அருகே உள்ள அரசபட்டி, வலையங்குளம், தூம்பக்குளம், கப்பலூர், திருப்பரங்குன்றம் சுற்றுவட்டார பகுதி என பல்வேறு பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் மல்லிகைப்பூ, பிச்சிப்பூ, முல்லை பூக்களை பயிரிட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக பூக்களின் விலை கிலோ ஒன்றுக்கு 250 ரூபாய் வரை மார்க்கெட்டில் விலை போகிறது. தற்போது சுபநிகழ்ச்சிகள் கோவில்கள் திருவிழா இல்லாததால் தோட்டங்களில் விலையும் மல்லிகைப்பூ, முல்லைப்பூ ஆகியவற்றை பறிப்பதற்கு கூலி வழங்கும் அளவிற்குதான் பூக்களின் விலை உள்ளது. பூக்களின் விலை வீழ்ச்சியால் கூலி கொடுக்க முடியாத நிலையில் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

மேலும் செய்திகள்