< Back
மாநில செய்திகள்
மதுரை இன்ஸ்பெக்டர் திடீர் பணியிடை நீக்கம் போலீஸ் கமிஷனர் அதிரடி நடவடிக்கை
மதுரை
மாநில செய்திகள்

மதுரை இன்ஸ்பெக்டர் திடீர் பணியிடை நீக்கம் போலீஸ் கமிஷனர் அதிரடி நடவடிக்கை

தினத்தந்தி
|
7 Oct 2023 1:45 AM IST

மதுரை நகரில் பணிபுரியும் இன்ஸ்பெக்டரை திடீர் பணியிடை நீக்கம் செய்து போலீஸ் கமிஷனர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

வி.கே.குருசாமி விவகாரம்

மதுரை தி.மு.க. முன்னாள் மண்டல தலைவர் வி.கே.குருசாமி. இவரை சில நாட்களுக்கு முன்பு ஒரு கும்பல் பெங்களூருவில் உள்ள ஒரு ஓட்டலில் வெட்டிக்கொல்ல முயன்றது. இதில் படுகாயம் அடைந்த அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அதில் வி.கே.குருசாமிக்கு எதிராக செயல்படும் அ.தி.மு.க. முன்னாள் மண்டல தலைவர் ராஜபாண்டியின் ஆதரவாளர்கள்தான் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை தேடி பெங்களூரு போலீசார் மதுரை வந்து விசாரணை நடத்தினர்.

அந்த நேரத்தில் இந்த வழக்கில் தொடர்புடைய நவீன் நாகராஜ் என்பவர் மீது தல்லாகுளம் போலீசில் குற்ற வழக்கு ஒன்று நிலுவையில் இருந்து வந்தது.

இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்

அந்த வழக்கில் பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அவருக்கு நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்து இருந்தது. இந்த நிலையில் நவீன்நாகராஜ் அந்த வழக்கில் தல்லாகுளம் போலீசில் சரண் அடைந்தார். உடனே போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன்பின்னர் நடத்திய விசாரணையில் பெங்களூருவில் வி.கே.குருசாமி கொலை முயற்சி வழக்கில் இவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இந்த சம்பவத்தில் சரண் அடைந்தவரிடம் சரியாக விசாரணை நடத்தாமல் கண்காணிக்க தவறியதாக தல்லாகுளம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சந்திரன் மீது புகார் எழுந்ததாக கூறப்படுகிறது. அது குறித்து போலீஸ் கமிஷனர் லோகநாதன் விசாரணை நடத்தி இன்ஸ்பெக்டர் சந்திரனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த நடவடிக்கை போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்