< Back
மாநில செய்திகள்
தற்காலிக ஆசிரியர் நியமனம் - தடையை நீக்க மதுரை ஐகோர்ட்டு மறுப்பு
மாநில செய்திகள்

தற்காலிக ஆசிரியர் நியமனம் - தடையை நீக்க மதுரை ஐகோர்ட்டு மறுப்பு

தினத்தந்தி
|
5 July 2022 2:02 PM IST

தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க மதுரை ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்து விட்டது.

மதுரை,

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான விண்ணப்பப்பதிவும் நேற்று தொடங்கியது. ஆனால் இந்த நியமனத்தில் முறைகேடு நடப்பதாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கத் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் தகுதி அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டுமென கோர்ட்டு கூறியதை ஏற்று, தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளில் தமிழக அரசு திருத்தம் செய்தது.

தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பான நீதிமன்றத் தடையை நீக்க வேண்டுமென தமிழக அரசு இன்று நீதிமன்றத்தில் முறையிட்டது. ஆனால், தற்காலிக ஆசிரியர்களை ஏன் நியமிக்க வேண்டுமென நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க என்ன அவசரம்? அதற்குப் பதிலாக நிரந்தர ஆசிரியர்களையே நியமிக்கலாமே எனக் கூறிய நீதிபதிகள், வழக்கு ஏற்கனவே பட்டியலிடப்பட்ட 8-ம் தேதியே வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனக் கூறினர்.

இதனிடையே தற்காலிக ஆசிரியர்களுக்கான விண்ணப்பப்பதிவு நேற்று தொடங்கியது. நாளை மாலை 5 மணி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும். ஆனால், மதுரை ஐகோர்ட்டு விதித்த தடையால், அந்நீதிமன்றத்தின் கீழ் உள்ள மாவட்டங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனத்தை மேற்கொள்ள இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்