< Back
மாநில செய்திகள்
உத்தபுரம் முத்தாலம்மன் கோவில் திருவிழாவுக்கு அனுமதி கேட்டு வழக்கு- அதிகாரிகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
மதுரை
மாநில செய்திகள்

உத்தபுரம் முத்தாலம்மன் கோவில் திருவிழாவுக்கு அனுமதி கேட்டு வழக்கு- அதிகாரிகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
22 Oct 2023 2:52 AM IST

உத்தபுரம் முத்தாலம்மன் கோவில் திருவிழாவுக்கு அனுமதி கேட்ட வழக்கில் அதிகாரிகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.


கோவில் திருவிழா

மதுரை மாவட்டம் உத்தபுரத்தை சேர்ந்த முருகேசன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- மதுரை மாவட்டம் உத்தபுரத்தில் முத்தாலம்மன் கோவில் உள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் இரு சமூகத்திற்கு இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இந்த கோவிலில் திருவிழா நடக்கவில்லை. மேலும் ஒரு தரப்பினர், கிராமத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் நோக்கில் செயல்பட்டு, கோவிலில் திருவிழா நடக்கவிடாமல் செய்தனர்.

வழக்கு

இதனை தொடர்ந்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, இரு தரப்பினரிடையே சமரசம் செய்யப்பட்டது. சுமார் 7 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த கோவிலில் வருகிற 24-ந்தேதியில் இருந்து 26-ந்தேதி வரை திருவிழா நடத்த திட்டமிட்டு, அதற்கான பணிகள் நடந்து வருகிறது. கோவில் திருவிழாவுக்கான அனுமதி வழங்கி உரிய பாதுகாப்பு அளிக்கும்படி போலீசாரிடம் அதிகாரிகளிடமும் மனு அளித்தோம் இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே உத்தபுரம் முத்தாலம்மன் கோவிலில் திருவிழா நடந்த அனுமதியும், பாதுகாப்பும் வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது இந்த வழக்கு குறித்து உசிலம்பட்டி போலீஸ் டி.எஸ்.பி. மற்றும் அதிகாரிகள் பதில் அளிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் மாதம் 2-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

மேலும் செய்திகள்