< Back
மாநில செய்திகள்
கோவில்களில் சித்த மருத்துவப்பிரிவு அமைக்கக்கோரி வழக்கு- அறநிலையத்துறை பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
மதுரை
மாநில செய்திகள்

கோவில்களில் சித்த மருத்துவப்பிரிவு அமைக்கக்கோரி வழக்கு- அறநிலையத்துறை பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
27 Oct 2023 2:02 AM IST

கோவில்களில் சித்த மருத்துவப்பிரிவு அமைக்கக்கோரி வழக்கில் அறநிலையத்துறை பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.


மதுரையை சேர்ந்த டாக்டர் ஜெயவெங்கடேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தமிழகத்தில் உள்ள கோவில்களில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். இதற்காக கோவில்களில் குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக இருக்கின்றனர். அந்த சமயங்களில் முதியவர்கள், குழந்தைகள் போன்றவர்களுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்படலாம். அதுபோன்ற நேரங்களில் அவர்களுக்கு முதல் உதவி செய்ய வசதியாக கோவில்களில் சித்த மருத்துவ பிரிவு அமைப்பது அவசியம்.

தமிழகத்தில் உள்ள 48 கோவில்களில் சித்த மருத்துவ பிரிவு அமைக்க ஏற்கனவே அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஆனால் 6 கோவில்களில் மட்டுமே சித்த மருத்துவ பிரிவு ஏற்படுத்தப்பட்டு டாக்டர்கள் பணியில் உள்ளனர். பெரும்பாலான கோவில்களில் அந்த அரசாணை அமல்படுத்தப்படவில்லை. கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் பெருமளவில் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்தது. சித்த மருத்துவ சிகிச்சையை அவசர காலங்களில் பயன்படுத்தும் வகையில் தமிழகத்தில் உள்ள முக்கியமான கோவில்களில் உடனடியாக சித்த மருத்துவ பிரிவு அமைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், தனபால் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகள் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு, அடுத்தகட்ட விசாரணையை 6 வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.

மேலும் செய்திகள்