மதுரை
போலீஸ் அதிகாரி டேவிட்சன் தேவாசீர்வாதத்துக்கு எதிராக மேல்முறையீடு தேவையில்லை
|போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் போலீஸ் அதிகாரி டேவிட்சன் தேவாசீர்வாதத்துக்கு எதிராக மேல்முறையீடு தேவையில்லை என்று நீதிபதிகள் தெரிவித்து, மேல்முறையீடுக்கு அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் போலீஸ் அதிகாரி டேவிட்சன் தேவாசீர்வாதத்துக்கு எதிராக மேல்முறையீடு தேவையில்லை என்று நீதிபதிகள் தெரிவித்து, மேல்முறையீடுக்கு அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
போலி பாஸ்போர்ட் விவகாரம்
மதுரையில் 50-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு போலி பாஸ்போர்ட் வழங்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளில் அப்போதைய மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதத்துக்கும் தொடர்பு உள்ளது என்றும், எனவே அவர் உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜனதா மாநிலத்தலைவர் அண்ணாமலை புகார் செய்தார்.
ஆனால் இதுதொடர்பான வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, இந்த விவகாரத்திற்கும், போலீஸ் அதிகாரி டேவிட்சன் தேவாசீர்வாதத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவித்தது.
மேலும் பாஸ்போர்ட் மோசடி வழக்கில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்து, விசாரணையை 3 மாதத்தில் முடிக்க வேண்டும் என்றும் ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.
அவமதிப்பு வழக்கு
இந்தநிலையில் மதுரை வடக்கு மாசி வீதியை சேர்ந்த வக்கீல் முருககணேசன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த அவமதிப்பு வழக்கில், "அகதிகளுக்கு மதுரை மாநகர போலீஸ் நிலையத்தில் போலி பாஸ்போர்ட் வழங்கப்பட்டு உள்ளது. இந்த போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் பாஸ்போர்ட் அலுவலர்கள், தபால் நிலைய அலுவலர்கள், போலீசார் உள்ளிட்ட பலர் மீது கியூ பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட கோர்ட்டில் விசாரணையில் உள்ளது.
இந்த வழக்கில் போலீஸ் அதிகாரிகளும் சிக்கி இருப்பதால் இது தொடர்பாக மாவட்ட கோர்ட்டில் நடந்து வரும் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் தாமதித்து வருகின்றனர். எனவே அதிகாரிகள் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தார். இந்த வழக்கும் நிலுவையில் உள்ளது.
தீர்ப்புக்கு எதிராக மனு
இந்த நிலையில் போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் அப்போதைய மதுரை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் சம்பந்தப்படவில்லை என ஐகோர்ட்டு தனி நீதிபதி அளித்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கு அனுமதி தர வேண்டும் என்று முருககணேசன், மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்சில் மற்றொரு மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
தள்ளுபடி
அப்போது, "குற்றச்சாட்டில் நேரடி தொடர்புடையவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். போலி பாஸ்போர்ட் விவகாரத்திற்கு அப்போதைய மதுரை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் பொறுப்பாகமாட்டார் என்ற தனி நீதிபதியின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய தேவையில்லை" என நீதிபதிகள் தெரிவித்தனர். பின்னர் இந்த மேல்முறையீடுக்கு அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.