மதுரை
சாட்சியை கலைக்க முயற்சி நடந்ததா? என்பதை விசாரிக்க கூடுதல் சூப்பிரண்டு தலைமையில் குழு
|பெண் இன்ஸ்பெக்டர் வசந்தி ரூ.10 லட்சம் பறித்தது தொடர்பான வழக்கில் சாட்சியை கலைக்க முயற்சி நடந்ததா? என்பதை விசாரிக்க கூடுதல் சூப்பிரண்டு தலைமையில் குழு அமைக்க வேண்டும் என ஐ.ஜி.க்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
பெண் இன்ஸ்பெக்டர் வசந்தி ரூ.10 லட்சம் பறித்தது தொடர்பான வழக்கில் சாட்சியை கலைக்க முயற்சி நடந்ததா? என்பதை விசாரிக்க கூடுதல் சூப்பிரண்டு தலைமையில் குழு அமைக்க வேண்டும் என ஐ.ஜி.க்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
ரூ.10 லட்சம் பறித்த வழக்கு
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி இந்திராநகரை சேர்ந்தவர் அர்ஷத் (வயது 32). இவர், கடந்த 2021-ம் ஆண்டு சொந்தமாக பேக் தயாரிக்கும் கம்பெனி வைக்க சிலரிடம் ரூ.10 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அந்த பணத்துடன் மதுரை நாகமலைபுதுக்கோட்டைக்கு வந்தார். அங்கு ஒருவரிடம் ரூ.5 லட்சம் கடன் பெறுவதற்காக நின்றிருந்தார்.
அப்போது அங்கு வந்த அப்போதைய நாகமலைபுதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி, அர்ஷத் வைத்திருந்த ரூ.10 லட்சத்தை பறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. பணத்தை திரும்ப கேட்டால், கஞ்சா வழக்கு போட்டு கைது செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.
இது குறித்து அர்ஷத், மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவிடம் புகார் செய்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் விசாரித்து இன்ஸ்பெக்டர் வசந்தி உள்பட 5 பேர் மீது வழக்குபதிவு செய்தனர்.
நிபந்தனை ஜாமீன்
இதையடுத்து தலைமறைவான வசந்தியை பல மாதங்கள் கழித்து போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. இந்தநிலையில் பணம் பறித்த வழக்கின் புகார்தாரருடன் சமரசமாக போய்விட்டோம். அதனால் எங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று வசந்தி தரப்பினர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதேபோல வசந்தி உள்ளிட்ட 5 பேரும் ஜாமீன் நிபந்தனைகளை மீறியதால், ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று போலீஸ் துணை சூப்பிரண்டு சார்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மிரட்டினார்களா?
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி புகழேந்தி நேற்று பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
நீதித்துறையின் செயல்பாடுகளை சீர்குலைக்கும் நடவடிக்கைகளை ஒருபோதும் ஏற்க முடியாது. நியாயமான விசாரணையை உறுதிப்படுத்துவது கோர்ட்டின் கடமை. எனவே இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள், தங்களின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி புகார்தாரரையும், சாட்சிகளையும் கலைக்க முயற்சி செய்தார்களா? என்பதை விசாரிக்க கூடுதல் சூப்பிரண்டு அல்லது துணை சூப்பிரண்டு தலைமையிலான குழுவை தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. ஏற்படுத்த வேண்டும்.
சாட்சிகளை கலைக்க முயற்சி செய்தது உறுதிப்படுத்தப்பட்டால், அதுதொடர்பாக புதிய வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
சாட்சிகளுக்கு பாதுகாப்பு
புகார்தாரருக்கும், சாட்சிகளுக்கும் உரிய பாதுகாப்பை ஐ.ஜி. வழங்க வேண்டும். இந்த மோசடி வழக்கை கீழ்கோர்ட்டு, விரைவாகவும் நியாயமாகவும் விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும்.
நீதியின் கண் மற்றும் காதுகளாக இருப்பவர்கள் சாட்சிகள்தான். அவர்கள் எந்த பயமும் இன்றி கோர்ட்டில் சாட்சி சொல்ல வேண்டும். அவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை சட்டப்பணிகள் ஆணைக்குழு வழங்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.