< Back
மாநில செய்திகள்
ஊரக வளர்ச்சித்துறை  முதன்மை செயலாளர் ஆஜராக வேண்டும்
மதுரை
மாநில செய்திகள்

ஊரக வளர்ச்சித்துறை  முதன்மை செயலாளர் ஆஜராக வேண்டும்

தினத்தந்தி
|
6 Aug 2022 12:05 AM IST

ஊரக வளர்ச்சித்துறை  முதன்மை செயலாளர் ஆஜராக வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்து.


ராமநாதபுரம் மாவட்டம் பட்டினம்காத்தான் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அதிகாரியாக பணிபுரிந்து வருகிறேன். கடந்த 2020-ம் ஆண்டு பதவி உயர்வுக்கான அறிவிப்பில் எனது பெயர் 30-வதாக இருந்தது. பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்ட பதவி உயர்வு அரசாணையில் எனது பெயர் 11-வதாக இருந்தது. ஆனால் தற்போதுவரை எனக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை. காரணம் கேட்டபோது, முறைகேடு புகார் அடிப்படையில் என் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையாக பதவி உயர்வு வழங்கப்படவில்லை என வாய்மொழியாக தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பான தகவல்கள் எனக்கு அளிக்கப்படவில்லை. எனவே எனக்கு உரிய பதவி உயர்வை வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் மனுவை பரிசீலித்து பதவி உயர்வு வழங்குகிறோம் என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, மனுதாரர் மீது ஊழல் குற்றச்சாட்டு நிலுவையில் இருப்பதால் பதவி உயர்வு பட்டியலில் இருந்து அவர் பெயர் நீக்கம் செய்யப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று கூறி, அந்த அரசாணையை நீதிபதியிடம் வழங்கினார். இதனை ஏற்க மறுத்த நீதிபதி, கடந்த விசாரணையின்போது மனுதாரருக்கு பதவி உயர்வு வழங்குவதாக தெரிவித்தீர்கள். தற்போது அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்ததை ஏன் கடந்த விசாரணையின்போது தெரிவிக்கவில்லை. அதிகாரிகளின் இந்த நடவடிக்கை ஏற்புடையதல்ல. இது தொடர்பாக விளக்கம் அளிக்க ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை முதன்மை செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை வருகிற 12-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.


மேலும் செய்திகள்