பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களை பெண் நீதிபதி முன்பு ஆஜர்படுத்த வேண்டும் - டி.ஜி.பி.க்கு மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு
|சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை பின்பற்ற டி.ஜி.பி. தரப்பில் போலீசாருக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மதுரை,
கன்னியாகுமரியைச் சேர்ந்த ஒரு நபர் தான் பெற்ற மகளையே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட நபர் ஜாமீன் கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், மனுதாரர் சிறையில் இருந்த காலத்தை கணக்கில் கொண்டு அவருக்குக் ஜாமீன் வழங்கப்படுவதாகவும், நாகர்கோவில் போக்சோ நீதிமன்றத்தில் காலை, மாலை இருவேளையும் கையெழுத்திட வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
மேலும் நீதிபதி தனது உத்தரவில், பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலத்தை ஆண் மேஜிஸ்திரேட் பதிவு செய்துள்ளார் எனவும், இது போன்ற பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களை பெண் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி வாக்குமூலம் பதிய வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு மீறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதையடுத்து இது போன்ற பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களை பெண் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி வாக்குமூலம் பதிய வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை பின்பற்ற டி.ஜி.பி. தரப்பில் போலீசாருக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.