< Back
மாநில செய்திகள்
தேவர் தங்கக்கவசத்தை திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைக்க மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
மாநில செய்திகள்

தேவர் தங்கக்கவசத்தை திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைக்க மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு

தினத்தந்தி
|
10 Oct 2023 6:28 PM IST

மதுரை வங்கி லாக்கரில் உள்ள பசும்பொன் தேவர் சிலை தங்க கவசத்திற்கு உரிமைக் கோரி அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட் கிளை, அதற்கான உரிமையை அவரிடமே வழங்க உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

அ.தி.மு.க. பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்தாவது:-ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் நினைவாலயத்தில் இருக்கும் அவரது திருஉருவ சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தங்கக்கவசம் வழங்கினார்.

மதுரை அண்ணாநகரில் உள்ள ஒரு வங்கி லாக்கரில் இந்த தங்கக்கவசம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தேவர் ஜெயந்தி, குருபூஜையையொட்டி முத்துராமலிங்க தேவரின் தங்கக்கவசம் வங்கியில் இருந்து எடுக்கப்பட்டு, பசும்பொன் கொண்டு சென்று தேவர் சிலைக்கு பொருத்தப்படும். இதற்காக அ.தி.மு.க. மற்றும் தேவர் நினைவிட பொறுப்பாளர்கள் சார்பில் வங்கி கணக்கு தொடங்கப்பட்டு, கட்சியின் பொருளாளர் பொறுப்பில் அந்த தங்கக்கவசம் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சில ஆண்டுகளாக அ.தி.மு.க.வின் பொருளாளராக இருந்து வந்த ஓ.பன்னீர்செல்வம் தங்கக்கவசத்தின் காப்பாளராக இருந்தார். தற்போது அவர் அ.தி.மு.க.வில் இருந்தும், பொருளாளர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். அதனால் தங்கக்கவசத்திற்கு அவர் எந்த வகையிலும் உரிமை கோர முடியாது.

எனவே, வருகிற 30-ந் தேதி முத்துராமலிங்கத்தேவர் குருபூஜையை முன்னிட்டு வங்கி லாக்கரில் உள்ள தங்கக்கவசத்தை தற்போதைய அ.தி.மு.க. பொருளாளராக இருக்கும் என்னிடம் ஒப்படைக்க வங்கி நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கடந்த 6ஆம் தேதி விசாரித்தார். அப்போது ஓபிஎஸ் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி மனுவுக்கு பதிலளிக்க 2 வாரம் கால அவகாசம் கோரினார். இதையேற்க மறுத்த நீதிபதி இது தொடர்பான வழக்குகளில் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதனால் விசாரணையை அக்டோபர் 10 ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக தெரிவித்தார். அன்றைய தினத்திற்குள் ஓபிஎஸ் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கில் ஓபிஎஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று தீர்ப்பளித்த கோர்ட், தேவர் கவசத்தை வங்கி லாக்கரில் இருந்து எடுக்கும் உரிமையை திண்டுக்கல் சீனிவாசனுக்கு வழங்கி உத்தரவிட்டார். தேவர் நினைவாலய பொறுப்பாளர்கள், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் இணைந்து வங்கியிலிருந்து எடுக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்