< Back
மாநில செய்திகள்
மதுரை மாநகராட்சி பூங்காக்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் - மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
மாநில செய்திகள்

மதுரை மாநகராட்சி பூங்காக்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் - மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு

தினத்தந்தி
|
19 Nov 2022 6:19 PM IST

நகர்ப்புறங்களில் உள்ள பூங்காக்கள் பல்லுயிர் பெருக்கத்திற்கு மிகவும் உதவுவதாக மதுரை ஐகோர்ட் கிளை கருத்து தெரிவித்துள்ளது.

மதுரை,

மதுரை மாநகராட்சியில் பூங்காக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, அவற்றை முறையாக பராமரிக்க உத்தரவிட வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இயற்கையுடன் இணைந்திருப்பது என்பது சாமானியர்களுக்கும், ஏழைகளுக்கும் ஆடம்பரமாகவே உள்ளது எனவும், நகர்ப்புற பகுதிகளில் உள்ள பூங்காக்கள் சாமானியர்களை மீண்டும் இயற்கையுடன் இணைக்கவும், மனதளவிலும், உடலளவிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்த உதவுவதாகவும் தெரிவித்தனர்.

மேலும் நகர்ப்புறங்களில் உள்ள பூங்காக்கள் பல்லுயிர் பெருக்கத்திற்கு மிகவும் உதவுவதாகவும், சாமானிய மக்களின் இதயங்களில் இயற்கையின் மகத்துவத்தை உணரச் செய்வதாகவும் தெரிவித்த நீதிபதிகள், பூங்காக்கள் நகர்ப்புறங்களில் உள்ள வெப்பத்தை சரிபடுத்தி குளிர்ச்சியாக வைக்க உதவும் என்று குறிப்பிட்டனர்.

பூங்காக்கள் நகர்ப்புறங்களின் நுரையீரலாக செயல்படுவதாகவும், பூங்காக்களை பொழுதுபோக்கிற்கான இடங்களாக பார்ப்பதைக் காட்டிலும் சுற்றுச்சூழல் முன்னேற்றத்திற்கு முக்கியம் என்பதை கட்டாயம் உணர வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

இதையடுத்து இந்த வழக்கில் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பூங்காக்களிலும் தேவையான அடிப்படை வசதிகள், கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் எனக்கூறி நீதிபதிகள் இந்த வழக்கை முடித்து வைத்தனர். மேலும் இது குறித்த அறிக்கையை 12 வாரங்களில் கோர்ட்டில் சமர்ப்பிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்