வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய வழக்கு - பா.ஜ.க. நிர்வாகிக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை முன்ஜாமீன் மறுப்பு
|போலியான வீடியோவை பதிவிட்டது தொடர்பான வழக்கில் பா.ஜ.க. நிர்வாகிக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை முன்ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது.
மதுரை,
தமிழ்நாட்டில் பீகாரை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் கொல்லப்படுவதாக உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகி பிரசாந்த் உம்ராவ், தனது டுவிட்டர் பக்கத்தில் போலி செய்தியை பகிர்ந்தார். அந்த பதிவில், தமிழ்நாட்டில் பீகாரை சேர்ந்த 12 புலம்பெயர் தொழிலாளர்கள் அடித்துக்கொல்லப்பட்டதாக தவறான தகவலை பதிவிட்டிருந்தார்.
வடமாநிலங்களில் உள்ள பா.ஜ.க. கட்சியின் சமூகவலைதளங்களில் இந்த போலி செய்தி பரப்பப்பட்டது. அதேபோல், தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் அடித்துக்கொலை செய்யப்படுவதாக இந்தி நாளிதழான தினிக் பாஸ்கர் என்ற செய்திதாளில் போலியாக செய்தி வெளியிடப்பட்டது.
இதையடுத்து போலி செய்திகளை பரப்பியதற்காக உத்தரபிரதேச பா.ஜ.க. செய்திதொடர்பாளர் பிரசாந்த் குமார் உம்ராவ், இந்தி நாளிதழ் தினிக் பாஸ்கர் தலைமை ஆசிரியர், தன்வீர் போஸ்ட் என்ற டுவிட்டர் கணக்கின் உரிமையாளர் முகமது தன்வீர் ஆகிய 3 பேர் மீது தமிழ்நாடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் பிரசாந்த் குமார் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "மனுதாரர் திட்டமிட்டு தமிழகத்தில் அமைதியை சீர்குலைக்க வேண்டும் என நோக்கத்தில் வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளார். இதனால் தமிழகத்தில் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவிலும் பதற்றமான சூழல் நிலவியது. எனவே இவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதால் முன்ஜாமீன் வழங்கக்கூடாது" என்று வாதிட்டார்.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த வீடியோ தமிழகத்தில் பிற மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது என்றும் இதனால் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவது போன்ற பதற்றமான சூழல் உருவானது என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து உத்தரவிட்ட நீதிபதி, இந்த மனு குறித்து காவல்துறை தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.