< Back
மாநில செய்திகள்
2-வது நாளாக தொழில்நுட்ப கோளாறு: மதுரை-துபாய் விமானம் ரத்து
மதுரை
மாநில செய்திகள்

2-வது நாளாக தொழில்நுட்ப கோளாறு: மதுரை-துபாய் விமானம் ரத்து

தினத்தந்தி
|
12 Jun 2022 8:21 PM GMT

2-வது நாளாக தொழில்நுட்ப கோளாறு காரணமாக மதுரை-துபாய் விமானம் ரத்து செய்யப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

மதுரை,

2-வது நாளாக தொழில்நுட்ப கோளாறு காரணமாக மதுரை-துபாய் விமானம் ரத்து செய்யப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

துபாய் விமானம் ரத்து

மதுரை விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை 4.30 மணிக்கு துபாய் செல்ல தனியார் விமானம் தயார் நிலையில் இருந்தது. அதில் 169 பயணிகள் முன்பதிவு செய்து இருந்தனர்.

விமானம் புறப்பட முயன்றபோது அதில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பயணிகள் அனைவரும் விமான நிலைய வளாகத்தில் காத்திருக்கும் நிலை உருவானது. அதன் பின்னர் சென்னையிலிருந்து தொழில்நுட்ப வல்லுனர்கள் வரவழைக்கப்பட்டு விமானத்தை சரிசெய்ய முயன்றனர். ஆனாலும் இரவு 9.30 மணிவரை விமானம் சரிசெய்ய முடியாததால் ரத்து செய்யப்பட்டது என அறிவிக்கப்பட்டது.

பயணிகள் வாக்குவாதம்

இதனால் துபாய் செல்ல இருந்த பயணிகள் சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானம் செய்த விமான நிறுவனம் இன்று (திங்கட்கிழமை) விமானம் புறப்படும் என்றும், பயணம் செய்ய விரும்பாதவர்களுக்கு பணம் திரும்ப கொடுக்கப்படும் என்றும், பயணம் செய்யவிரும்புவோர்கள் விடுதியில் தங்க வைக்கப்படுவர் எனவும் தெரிவித்தனர். இதில் பயணிகள் பலர் தங்களது பயணத்தை ரத்து செய்துவிட்டு, திரும்பச்சென்றனர். விமான நிலையத்தில் சுமார் 5 மணிநேரம் பயணிகள் காத்திருந்து பின்பு விமானம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

துபாய் சென்றவர்களும் அவதி

இதே தனியார் விமானம் மதுரையிலிருந்து நேற்று முன்தினம் சுமார் 7 மணிநேரம் தாமதமாக துபாய் புறப்பட்டு சென்றது குறிப்பிடத்தக்கது. மேலும் அன்றைய தினம் விமானத்தில் சென்ற பயணிகள் சிலர், அவர்களது உடைமைகளை மதுரை விமான நிலையத்திலேயே வைத்துவிட்டு சென்றுள்ளனர். துபாய்க்கு விமானம் சென்றவுடன் பயணிகள் தங்களது உடமைகள் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்திடம் கேட்டபோது நேற்று மதுரையிலிருந்து துபாய் வரும் விமானத்தில் உடமைகளை கொண்டுவந்து கொடுப்பதாக விமான நிறுவனத்தினர் உறுதியளித்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் ரத்து செய்யப்பட்டதால் துபாய் சென்ற பயணிகளும் மாற்று உடைகள் இல்லாமல் அவதிப்படுகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்