< Back
மாநில செய்திகள்
மதுரை தி.மு.க. முன்னாள் மண்டல தலைவர்வி.கே.குருசாமியை பெங்களூருவில் வெட்டிக்கொல்ல முயற்சி
மதுரை
மாநில செய்திகள்

மதுரை தி.மு.க. முன்னாள் மண்டல தலைவர்வி.கே.குருசாமியை பெங்களூருவில் வெட்டிக்கொல்ல முயற்சி

தினத்தந்தி
|
4 Sep 2023 11:54 PM GMT

மதுரை தி.மு.க. முன்னாள் மண்டல தலைவர் வி.கே.குருசாமியை பெங்களூருவில் வெட்டிக் கொல்ல முயன்ற பயங்கரம் நடந்துள்ளது.


மதுரை தி.மு.க. முன்னாள் மண்டல தலைவர் வி.கே.குருசாமியை பெங்களூருவில் வெட்டிக் கொல்ல முயன்ற பயங்கரம் நடந்துள்ளது.

தி.மு.க. முன்னாள் நிர்வாகி

மதுரை காமராஜர்புரம், கீழ்மதுரை ரெயில்வே நிலையம் பகுதியை சேர்ந்தவர் வி.கே.குருசாமி. தி.மு.க. முன்னாள் மண்டல தலைவர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் மண்டல தலைவர் ராஜபாண்டிக்கும் இடையே தேர்தல் முன்விரோதம் இருந்து வந்தது. இதுதொடர்பாக இருதரப்பினரும் அடிக்கடி மோதி கொண்டதில் பலர் கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் இது தொடர்பாக பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் வி.கே.குருசாமி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரது உயிருக்கு ஆபத்து என்று போலீசார் எச்சரிக்கை செய்ததால் அவர் வெளியூரில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மதுரையில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் குருசாமி சென்றார்.

நேற்று மாலை 5.30 மணி அளவில் பெங்களூரு கம்மனஹள்ளி மெயின் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் ரியல் எஸ்டேட் ஏஜென்ட் ஒருவருடன் நின்று குருசாமி பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் குருசாமியை கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்று விட்டது.

தீவிர சிகிச்சை

இதில் பலத்த காயம் அடைந்த குருசாமி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். உடனே அப்பகுதி மக்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவல் அறிந்ததும் பானசாவடி போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். அப்போது குருசாமி மீது மதுரையில் போலீஸ் நிலையங்களில் வழக்குகள் இருப்பது தெரியவந்தது. எனவே எதிர் கோஷ்டியைச் சேர்ந்த கும்பல் அவரை கொலை செய்ய முயற்சித்து இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

2 தனிப்படைகள் மதுரை விரைந்தன

இதுகுறித்து பெங்களுரூ கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் பீமா சங்கர் குலைத் நிருபர்களிடம் கூறியதாவது:-

மதுரையை சேர்ந்த குருசாமியை பெங்களூரு பானசாவடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வைத்து ஆயுதங்களால் தாக்கி கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது. தமிழக பதிவு எண்ணை கொண்ட காரில் வந்த கும்பல் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளனர். மதுரையில் இருந்து வந்த கும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த கும்பலை பிடிக்க மதுரைக்கு 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அந்த தனிப்படைகள் மதுரைக்கு விரைந்துள்ளன. மேலும் அவருடன் நின்ற ரியல் எஸ்டேட் ஏஜென்டு லேசான காயத்துடன் உயிர் தப்பித்துள்ளார். சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்

இந்த தகவல் மதுரையில் காட்டுத்தீ போல பரவியது. அதை தொடர்ந்து மதுரை காமராஜர்புரம், கீரைத்துறை, வாழைத்தோப்பு, கீழ்மதுரைரெயில்வே நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்