< Back
மாநில செய்திகள்
டிடிஎப் வாசனின் காரை ஒப்படைக்க மதுரை கோர்ட்டு மறுப்பு
மாநில செய்திகள்

டிடிஎப் வாசனின் காரை ஒப்படைக்க மதுரை கோர்ட்டு மறுப்பு

தினத்தந்தி
|
12 July 2024 1:34 PM IST

செல்போன் பேசிக்கொண்டே கார் ஓட்டிய வழக்கில் டிடிஎப் வாசனிடம் பறிமுதல் செய்யப்பட்ட காரை மீண்டும் ஒப்படைக்க கோரிய வழக்கை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

மதுரை,

சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு கடந்த மே மாதம் 15ந் தேதி டிடிஎப் வாசன் தனது நண்பர்களுடன் பழகுநர் உரிமத்துடன் காரில் சென்றார். அப்போது மதுரை வண்டியூர் புறவழிச்சாலையில் பயணம் மேற்கொண்ட போது செல்போன் பேசியபடி வாகனத்தை இயக்கி அதை வீடியோவாக பதிவு செய்து தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார்.இதனையடுத்து சாலை போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த மதுரை அண்ணா நகர் போலீசார் டிடிஎப் வாசனை கைது செய்து அவரது காரை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து டிடிஎப் வாசன் மதுரை மாவட்ட கோர்ட்டில் ஜாமீன் கோரி மனு அளித்த நிலையில் அவருக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இந்நிலையில் டிடிஎப் வாசனின் தாயார் சுஜாதா போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட காரை தங்களிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மதுரை மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி சுப்புலெட்சுமி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவர் ஏற்கனவே இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார். அதனால் வாகனத்தை அவரிடம் ஒப்படைத்தால் அதேபோன்ற குற்றத்தை செய்ய வாய்ப்பு இருக்கலாம் என நீதிமன்றம் கருதுவதால் காரை ஒப்படைக்க உத்தரவிட முடியாது எனக்கூறி டிடிஎப் வாசனின் தாயார் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்