"என்னை போலீசார் துன்புறுத்தவில்லை" - கோர்ட்டில் சவுக்கு சங்கர் பதில்
|சவுக்கு சங்கரை 5-ந் தேதி வரை சிறையில் அடைக்க மதுரை கோர்ட்டு உத்தரவிட்டது.
மதுரை,
யூடியூபர் சவுக்குசங்கர், பெண் போலீஸ் குறித்தும், போலீஸ் அதிகாரிகள் பற்றியும் பாலியல் தொடர்பான அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக புகார்கள் எழுந்தன. அதன்பேரில் கோவை போலீசார் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர்.
கடந்த 4-ந்தேதி தேனியில் தங்கி இருந்த அவர் மீது கஞ்சா பதுக்கியதாக பழனிசெட்டிபட்டி போலீசார் மற்றொரு வழக்கை பதிவு செய்தனர். இந்த வழக்கிலும் அவர் கைதானார். கடந்த 20-ந்தேதி, இந்த வழக்கில் அவரை 2 நாள் காவலில் போலீசார் விசாரணை நடத்த மதுரை கோர்ட்டு அனுமதி வழங்கியது.
போலீஸ் காவல் நேற்று முடிவடைந்ததால், அவரை மதுரை போதைப்பொருள் தடுப்பு கோர்ட்டில் தேனி மாவட்ட போலீசார் ஆஜர்படுத்தனர். அப்போது அவரிடம், "காவலில் விசாரணை நடத்திய போலீசார் உங்களை துன்புறுத்தினார்களா?" என நீதிபதி செங்கமலச்செல்வன் கேள்வி எழுப்பினார். அதற்கு சவுக்கு சங்கர், விசாரணையின்போது போலீசார் எந்த துன்புறுத்தலிலும் ஈடுபடவில்லை. வக்கீல்கள் என்னை சந்திக்க அனுமதித்தனர் என்று தெரிவித்தார்.
இதையடுத்து அவரது நீதிமன்ற காவலை அடுத்த மாதம் (ஜூன்) 5-ந்தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் பலத்த பாதுகாப்புடன் வேனில் கோவை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
முன்னதாக சவுக்கு சங்கரை மதுரை கோர்ட்டு வளாகத்துக்குள் கொண்டு வந்தபோது, அங்கிருந்த சில வக்கீல்கள் சவுக்கு சங்கருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.