மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்
|மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
மதுரை,
மதுரையில் நடைபெறும் சித்திரை பெருந்திருவிழா உலக பிரசித்தி பெற்றது ஆகும். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருக்கல்யாணம் முடிந்ததும், அதை தொடர்ந்து கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கும் வைபமும் ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள்.
மேலும் 108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றானது, மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலாகும். இக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை திருவிழா முக்கியமானதாகும்.
இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏப்ரல் மாதம் 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மதுரை சித்திரை திருவிழா வரும் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பட்டாபிஷேகம் ஏப்ரல் 30ம் தேதி நடைபெற உள்ளது. மே 1-ம் தேதி மீனாட்சி அம்மன் திக் விஜயமும், மே 2-ம் தேதி மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும் நடைபெறும். மே 3ம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. மே 5-ம் தேதி சித்ரா பவுர்ணமி நாளில் கள்ளழகர் வைகையில் எழுந்தருளும் வைவபம் நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மொத்தம் 16 நாட்கள் நடக்கும் சித்திரை திருவிழாவின் போது மதுரை நகரமே விழாக் கோலம் பூண்டிருக்கும். சித்திரை திருவிழாவுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.