மதுரை சித்திரை திருவிழா: மீனாட்சி திருக்கல்யாண நிகழ்ச்சிக்கான ஆன்லைன் முன்பதிவு நிறைவு
|மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தைக் காண ஆன்லைன் மூலம் மொத்தமாக 5,793 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
மதுரை,
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் 23-ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழா மே மாதம் 8-ந்தேதி வரை, மொத்தம் 16 நாட்கள் நடைபெறுகிறது.
இவ்விழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி பட்டாபிஷேகம் ஏப்ரல் 30-ந்தேதி நடைபெறும் நிலையில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மே 3-ந்தேதி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி மே 5-ந்தேதி நடைபெற உள்ளது.
இதை காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில் மீனாட்சி திருக்கல்யாணத்தைக் காண ரூ.200 மற்றும் ரூ.500-க்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு கடந்த 22-ந்தேதி தொடங்கி நேற்று நிறைவடைந்தது.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தைக் காண ஆன்லைன் மூலம் மொத்தமாக 5,793 பேர் முன்பதிவு செய்துள்ளனர். பதிவுக்கான குறுஞ்செய்தி கிடைக்கப்பெற்றவர்கள் நாளை முதல் பணம் செலுத்தி நுழைவுச்சீட்டை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.