மதுரை சித்திரை திருவிழா: மீனாட்சியம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது
|அம்மனும், சுவாமியும் மணக்கோலத்தில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
மதுரை,
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 23-ந் தேதி தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது. பட்டத்து அரசியாக மீனாட்சி சென்று போரில் தேவர்களை வென்று, இறுதியில் சுந்தரேசுவரரிடம் போர் புரியும் திக்கு விஜயம் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
சித்திரை திருவிழாவில் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோவிலில் உள்ள வடக்கு-மேற்கு ஆடி வீதியில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் இன்று காலை மிதுன லக்னத்தில் கோலாகலமாக நடைபெற்றது. சுந்தரேசுவரர் மீனாட்சி அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவித்தார். இதைதொடர்ந்து அம்மனும், சுவாமியும் மணக்கோலத்தில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
இதையடுத்து இன்று இரவு 7.30 மணிக்கு சுந்தரேசுவரர் யானை வாகனத்திலும், மீனாட்சி அம்மன் ஆனந்தராயர் பூப்பல்லக்கிலும் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளை வலம் வருகிறார்கள். மீனாட்சி திருக்கல்யாணத்தை முன்னிட்டு மதுரை மாநகர் முழுவதும் விழாக்கோலமாக காட்சி அளிக்கிறது. பக்தர்கள் திருக்கல்யாணத்தை காணும் வகையில் பெரிய அளவிலான 20-க்கும் மேற்பட்ட இடங்களில் எல்.இ.டி. திரைகள் வைக்கப்பட்டு உள்ளன.