மதுரை சித்திரை திருவிழா ஏற்பாடுகள் - அமைச்சர்கள் சேகர்பாபு, மூர்த்தி நேரில் ஆய்வு
|சித்திரை திருவிழாவிற்கான ஏற்பாடுகள் குறித்து இன்று அமைச்சர் சேகர்பாபு, அமைச்சர் மூர்த்தி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
மதுரை,
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் 23-ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, மே மாதம் 8-ந்தேதி வரை நடைபெற உள்ளது. 16 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி பட்டாபிஷேகம் ஏப்ரல் 30-ந்தேதி நடைபெற உள்ளது.
இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி மே 5-ந்தேதி நடைபெற உள்ளது. இதை காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் சித்திரை திருவிழாவிற்கான ஏற்பாடுகள் குறித்து இன்று அமைச்சர் சேகர்பாபு, அமைச்சர் மூர்த்தி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர். சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரையில் வரும் மே 5-ந்தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.